தனது அடுத்த படத்தில் பாடலாசிரியராக அறிமுகமாகவுள்ளார் ராம் பொத்தினேனி.
மகேஷ் பாபு இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் புதிய படமொன்று உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் காதல் பாடலொன்றை எழுதியிருக்கிறார் ராம் பொத்தினேனி. முதன் முறையாக இப்படத்தின் மூலம் பாடலாசிரியராகவும் மாறியிருக்கிறார்.
மே 15-ம் தேதி ராம் பொத்தினேனியின் பிறந்த நாளன்று இப்பாடல் வெளியாகவுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு விவேக் – மெர்வின் கூட்டணி இசையமைத்து வருகிறது. இதில் ராமுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் நடித்து வருகிறார். முழுக்க காதல் பின்னணியில் இப்படம் உருவாகி வருகிறது.
ராம் பொத்தினேனியின் சமீபத்திய படங்கள் பெரும் தோல்வியை தழுவி வருகிறது. இதனால் இப்படத்தின் மீது பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறார். விரைவில் இதன் டீஸர் மற்றும் வெளியீட்டு தேதியை அறிவிக்கவுள்ளது படக்குழு.