‘பாகுபலி: தி எபிக்’ படத்தில் இருக்கும் ஆச்சரியங்கள் குறித்து மறைமுகமாக பேசியிருக்கிறார் தயாரிப்பாளர் ஷோபு.
‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ ஆகிய படங்களை ஒன்றாக இணைத்து ‘பாகுபலி: தி எபிக்’ என்ற பெயரில் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் பணிகள் ராஜமவுலி மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன. இதன் முடிவில் ‘பாகுபலி 3’ படத்துக்கான அறிவிப்பு இருக்கும் என்று தகவல்கள் பரவின. இது தொடர்பாக தயாரிப்பாளர் ஷோபு பேட்டியில் விளக்கமளித்துள்ளார்.
‘பாகுபலி 3’ தொடர்பாக தயாரிப்பாளர் ஷோபு, “‘பாகுபலி 3’ அறிவிப்பு நிச்சயமாக ‘பாகுபலி: தி எபிக்’ படத்தின் முடிவில் இருக்காது. ஆனால், வேறு சில ஆச்சரியங்கள் இருக்கலாம். ஆனால், அதுவுமே ‘பாகுபலி 3’ படத்துடன் தொடர்புடையது அல்ல. 3-ம் பாகத்திற்காக இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியதிருக்கிறது.
பாகுபலி உலகத்தில் இருந்து சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இந்த மாதிரியான மறு வெளியீடு ஒரு முறை மட்டும் நடக்கும் விஷயம் அல்ல. ஆனால், ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் கட்டத்தின் தொடக்கம் எனலாம். இந்த உலகத்தில் சொல்லக் கூடிய கதைகள் ஏராளமாக இருப்பதாக உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இதில் முதலில் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பதாக இருந்ததாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு “‘பாகுபலி’ படத்தில் நடிப்பதற்கு நாங்கள் யாரையுமே அணுகவில்லை. இது முழுக்க முழுக்க பிரபாஸ் நடிப்பதற்கு எழுதப்பட்ட கதை” என்று தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் ஷோபு. ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படங்கள் ‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’. இப்படங்கள் உலகளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.