பெங்களூரு: தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) பெங்களூருவில் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருடைய மறைவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த சரோஜா தேவிக்கு நேற்று காலை 9.30 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுதினர். இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் அஞ்சலிக்காக சரோஜா தேவியின் உடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.
சரோஜா தேவியின் உடலுக்கு கன்னட முன்னணி நடிகர்கள் சிவராஜ் குமார், உபேந்திரா, கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பெங்களூருவை சேர்ந்த ஏராளமான எம்ஜிஆர் ரசிகர்கள் அவருக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.
சரோஜா தேவியின் மறைவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர் குமாரசாமி, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சரோஜா தேவியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலிக்குப் பின் இன்று பகல் 12 மணியளவில் இறுதி சடங்கு நடைபெறுகிறது.