தமிழில் சினிமா தொடங்கிய காலகட்டங்களில் இலங்கை தயாரிப்பாளர்கள் பலர் சென்னை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல பகுதிகளில் தங்கள் திரைப்படங்களைத் தயாரித்தனர். முதல் சிங்களப் படமான ‘கடவுனு பொருண்டுவா’ தென்னிந்தியாவில்தான் தயாரிக்கப்பட்டது.
இலங்கை திரைப்படத்துறையின் முன்னோடியான எஸ்.எம்.நாயகம் அதைத் தயாரித்தார். அவர் சித்ரகலா மூவிடோன் என்ற சினிமா ஸ்டூடியோவை மதுரையில் நிறுவி படங்களைத் தயாரித்து வந்தார். அவரைப் போலவே இலங்கையைச் சேர்ந்த எம்.ஹெச்.எம்.மூனாஸ் சில வருடங்கள் சென்னையில் வசித்து வந்தார். அவர் தயாரிப்பில் உருவான படம், உலகம். வசனம், பாடல்களை அவரே எழுதினார். 1950-க்கு முன் நடித்துக் கொண்டிருந்த பெரும்பாலான நடிகர்கள் இதில் நடித்தனர்.
வி.நாகையா, எம்.வி.ராஜம்மா ஜோடியாக நடித்தனர். வரதன், பி.கே.சரஸ்வதி, பி.எஸ்.வீரப்பா, டி.கே.பகவதி, எம்.எஸ்.திரவுபதி, டி.ஆர்.ரஜனி, எஸ்.எம்.குமரேசன், ‘புளிமூட்டை’ ராமசாமி, எம்.ஆர்.சாமிநாதன், டி.ஆர்.சுவாமிநாதன், குஞ்சிதபாதம், வி.டி.கல்யாணம், டி.வி.சேதுராமன், ‘அப்பா’ கே.துரைசாமி, எம். லட்சுமி பிரபா, சி.கே.சரஸ்வதி, கே.எஸ். அங்கமுத்து, கே.அரங்கநாயகி, என்.ஆர்.சகுந்தலா, ஜி.சரோஜா, ‘பேபி’ லட்சுமி குமாரி, நடனக் கலைஞர்களான லலிதா-பத்மினி என பெரும் நட்சத்திரக் கூட்டமே இதில் நடித்தது.
அந்தக் காலகட்டத்தில் பிரபல படத்தொகுப்பாளராக இருந்த எல்.எஸ்.ராமச் சந்திரன் இயக்கினார். ஆர்.ஆர்.சந்திரன் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு எம்.எஸ்.ஞானமணி இசை அமைத்தார். கவிகுஞ்சரம், கே.பி. காமாட்சி, பி. அனுமந்தராவ், குயிலன், தமிழ் ஒளி பாடல்களை எழுதினர். ‘தெக்கத்திக் கள்ளனடா’, ‘இந்த தள்ளாடும் கிழத்தாடி தாத்தாவுக்கும்’, ‘காதலினால் உலகமே’, ‘கலையே உயிர் துணையே’ உள்பட பல பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.
ஒரு ஏழைக் குடும்பம் செல்வச் செழிப்பாக மாறுவதுதான் கதை. அந்த ஏழை தம்பதிக்கு 2 மகன்கள். அவர்களின் திருமணத்துக்குப் பிறகு சிக்கல்கள் ஏற்பட்டு எப்படி சுபம் ஆகிறது என்று கதை செல்லும்.
சென்னையில் அப்போது பிரபலமாக இருந்த பல்வேறு வகையான நடனங்கள் மற்றும் மல்யுத்தப் போட்டிகள் இதில் இடம்பெற்றன. தமிழ், தெலுங்கில் உருவாக்கப்பட்ட இதன் ரிலீஸுக்கு பிறகு வித்தியாசமான விளம்பரத்தைப் படக்குழுவினர் செய்தனர். படத்தின் டிக்கெட்டோடு, உங்களின் மனதைத் தொட்ட கதாபாத்திரத்தின் பெயர், அதிகபட்ச அனுதாபத்தைத் தூண்டிய கேரக்டர், பிடித்த பாடல் ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பினால், அவர்களுக்குப் பரிசு என்று அறிவித்திருந்தார்கள்.
முதல் பரிசு ரூ.25 ஆயிரம். அந்த காலகட்டத்தில் இந்த தொகை பெரிது. ஒரு படத்துக்கு முதன் முதலாகப் பரிசு என்று அறிவிக்கப்பட்டது தமிழில் இதற்குத்தான் என்கிறார்கள். 1953-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படம், ஏகப்பட்ட நடிகர்கள், பிரம்மாண்டம், பரிசு என இருந்தாலும் இரண்டு மொழியிலும் வெற்றிப் பெறவில்லை
என்பது சோகம்!