‘பராசக்தி’ தலைப்பு சர்ச்சையான சமயத்தில் என்ன நடந்தது என்பது குறித்து நடிகர் விஜய் ஆண்டனி பேசியிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிக்க ‘பராசக்தி’ மற்றும் விஜய் ஆண்டனி நடிக்க ‘பராசக்தி’ என இரண்டு படங்கள் ஒரே சமயத்தில் அறிவிக்கப்பட்டன. இதனால் தலைப்பு யாருக்கு என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இறுதியாக விஜய் ஆண்டனியிடம் பேசி தலைப்பை பெற்றுக் கொண்டது சிவகார்த்திகேயன் படக்குழு. தனது படத்துக்கு ‘சக்தி திருமகன்’ என தலைப்பை மாற்றிக் கொண்டார் விஜய் ஆண்டனி.
‘மார்கன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ‘பராசக்தி’ தலைப்பு சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜய் ஆண்டனி, “அவர்களுக்கும் தலைப்பு என்னிடத்தில் இருப்பது தெரியாது. படத்தின் தலைப்பு பதிவு செய்வதற்கு இரண்டு, மூன்று யூனியன்கள் இருக்கின்றன. ‘பராசக்தி’ படத்தின் தலைப்பை அறிவித்துவிட்டார்கள். அதுவும் மக்களிடையே போய் சேர்ந்துவிட்டது.
எனக்கு ஒரு தயாரிப்பாளரின் வலி தெரியும் என்பதால் நானே நட்பின் அடிப்படையில் விட்டுக் கொடுத்துவிட்டேன். அந்த தலைப்பை விட்டுக் கொடுத்ததற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
ஜூன் 27-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘மார்கன்’. இதனை விஜய் ஆண்டனி தயாரித்து, நாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் எடிட்டர் லியோ ஜான் பால்.