‘கூலி’ பணிகளால் ‘பராசக்தி’ படத்தில் நடிக்க முடியாமல் போனதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 14-ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கூலி’ வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இடையே, லோகேஷ் கனகராஜை நாயகனாக நடிக்கவைக்க பலரும் அணுகி வருகிறார்கள். இதில் ‘பராசக்தி’ படத்தில் நடிக்க முடியாமல் போனது குறித்து பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
அந்தப் பேட்டியில் ‘பராசக்தி’ குறித்து லோகேஷ் கனகராஜ் கூறும்போது, “3 வருடங்களாக நிறைய நண்பர்கள் என்னை நடிக்க வைக்க அணுகிறார்கள். சமீபத்தில் கூட ‘பராசக்தி’ படத்தில் வில்லனாக நடிக்க அணுகினார்கள். சுதா கொங்காரா மேடம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட அனைவருமே நம்பி வாங்க பண்ணலாம் என்றார்கள். அந்தக் கதையும் ரொம்பவே பிடித்திருந்தது. ஆனால், ‘கூலி’ பணிகள் பாதிக்கும் என்பதால் அதில் நடிக்க முடியவில்லை. இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் நடிக்க முடியாமல் போன கதாபாத்திரத்தில் தான் ரவி மோகன் நடித்து வருகிறார். ‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவிமோகன், ஸ்ரீலீலா, ராணா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டான் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தை சுதா கொங்கரா இயக்கி வருகிறார்