சந்துருவின் (ராஜு) அம்மா லலிதாவும் (சரண்யா பொன்வண்ணன்), மதுவின் (ஆதியா பிரசாத்) அம்மா உமாவும் (தேவதர்ஷினி) தங்கள் பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கத் திட்டமிடுகிறார்கள். அதாவது, பிள்ளைகள் காதலித்தது போல இருக்க வேண்டும்; அது அரேஞ்ச்டு திருமணமாகவும் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், சந்துருவும் மதுவும் வேறு வேறு நபர்களைக் காதலிக்கிறார்கள். இந்தக் காதல்களில் ட்விஸ்ட்டுகள் நடக்கின்றன. இதன் பின்னர் ராஜுவும் மதுவும் என்ன ஆனார்கள்? அம்மாக்களின் எண்ணங்கள் நிறைவேறியதா? என்பது கதை.
இந்தக் காலத்துத் தலைமுறையின் காதலையும், அதன் போக்கையும் நகைச்சுவை கலந்து திரைக்கதையாக்க முயற்சித்திருக்கிறார், இயக்குநர் ராகவ் மிர்தத். காதல் என்கிற பெயரில் இளைய தலைமுறையினர் அடிக்கும் லூட்டிகளையும், காதலை டேக் இட் ஈசியாக கையாள்வதையும் இயக்குநர் மிகையில்லாமல் சொல்லியிருப்பது ரசிக்க வைக்கிறது. தலைமுறை இடைவெளி, காதல் கனவுகளைப் பற்றியும் பேசியிருப்பது நன்று. பிள்ளைகளின் மனங்களையும், அவர்களுடைய காதலையும் அறியமுடியாமல் பெற்றோர் தவிப்பதையும் படம்பதிவு செய்திருக்கிறது இப்படியும் அம்மாக்கள் இருப்பார்களா? என்று சொல்லுமளவு பிள்ளைகளைக் காதலிக்க வைக்க, அவர்கள் படும் பாடு, சற்று அதீதமாகத் தெரிந்தாலும் நகைச்சுவைக் காட்சிகளால் அவை மறந்துவிடுகிறது. காதலர்களின் லூட்டிகள், குடும்பத்தினரின் ஆசைகள் எனப் பல காட்சிகளைத் தொய்வில்லாமல் படமாக்கி இருக்கிறார்கள்.
இதுபோன்ற நேர்மறையான சில அம்சங்கள் இருந்தாலும், படத்தில் வரும்இரண்டு காதல் கதைகளும் தெளிவில்லாமலும் அழுத்தம் இல்லாமலும் திரைக்கதையாக்கப் பட்டிருக்கின்றன. சிறு வயது முதல் நண்பர்களாக இருப்பவர்களின் பிரிவிலும் அழுத்தம் இல்லை. 2 மில்லியன் பேர் பின்தொடரும் இன்ஃபுளூயன்சர், எடுத்த எடுப்பில் காதலில் விழுவதும், பிரேக் அப்புக்காகச் சொல்லப்படும் காரணங்களும் ஏற்கும்படி இல்லை.
இந்தக் காதல், பிரேக் அப் ஆகிவிடும் என்பதை யூகிக்க முடிவதும் ரசனையைக் குறைத்துவிடுகிறது. இன்னொரு காதலின் பிரேக் அப்-பும் அழுத்தமே இல்லாமல் படமாக்கப்பட்டிருக்கிறது. கடந்தக் காலத்தைப் பற்றிப் பேசத் தேவையில்லை என்று படம் வலியுறுத்தினாலும், நிகழ்காலத்தில் செய்கிற ஒவ்வொரு செயலும்தான் கடந்த காலமாகிறது என்பதையும் சேர்த்தே போதித்திருக்கலாம்.
கதையின் நாயகனாக ராஜு ஜெயமோகன், ‘பிக்பாஸ்’ அறிமுகமாக இருந்தாலும், கதாபாத்திரத்துக்கேற்ப நடிப்பிலும் மெனக்கெட்டிருக்கிறார். உடல்மொழியில் கவனம் செலுத்தினால், நடிப்பில் மிளிரலாம். ஆதியா பிரசாத் சேட்டைப் பெண்ணாக ஈர்க்கிறார். பாவ்யா த்ரிகாவின் தேர்விலும் நடிப்பிலும் குறையில்லை. அம்மாக்களாக வரும் சரண்யா பொன்வண்ணனும், தேவதர்ஷினியும் சரியான தேர்வு. இருவரும் தங்கள் பாணியில் சிரிக்க வைக்கிறார்கள். கவுரவத் தோற்றத்தில் வந்து அறிவுரைகளை மட்டும் கூறி செல்கிறார் விக்ராந்த். ஜாலியான அப்பாவாக சார்லி, நண்பராக மைக்கேல் தங்கதுரை ஆகியோரும் தங்கள் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
படத்துக்கு இசை, நிவாஸ் கே பிரசன்னா.பாடல்கள் கேட்கும் ரகம்தான். பாபு குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகாகத் தெரிகின்றன. ஜான் ஆபிரகாமின் படத்தொகுப்பில் கிளைமாக்ஸ் காட்சியை விரைவாக முடிக்கும் அவசரம் தெரிகிறது. பன் பட்டர் ஜாம் – கொஞ்சம் ருசி, கொஞ்சம் திகட்டல்.