சென்னை: பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள நடிகை மீரா மிதுனை, கைது செய்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆஜர்படுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டியலினத்தவர் குறித்து அவதுாறாக பேசி, சமூக வலைதளத்தில், வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோருக்கு எதிராக, வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட, ஏழு பிரிவுகளின் கீழ், சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, 2021 ஆகஸ்ட்டில் இருவரையும் கைது செய்தனர்.
பின், இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத மீரா மிதுனுக்கு எதிராக, 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிடி வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, தனிப்படையும் அமைக்கப்பட்டது.
பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, தலைமறைவாக இருந்து வந்த மீரா மிதுனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கில், வாரண்டை நிறைவேற்றாத போலீஸாரின் நடவடிக்கைக்கு, நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.
இந்நிலையில், டெல்லி நகர வீதிகளில் சுற்றி வரும் நடிகை மீரா மிதுனை மீட்கக் கோரி, அவரது தாய் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில், நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம், டெல்லியில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, டெல்லி போலீஸாரால் பிடிக்கப்பட்ட மீரா மிதுன், அங்குள்ள அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, டெல்லி காப்பகத்தில் உள்ள மீரா மிதுனை கைது செய்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஆஜர்படுத்தும்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.