நாகை அருகே படப்பிடிப்பின்போது திரைப்பட சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழந்த சம்பவத்தில், அலட்சியத்தால் நடந்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி கிராமத்தில் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் ‘வேட்டுவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 10-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது கார் சேசிங் காட்சி படம் பிடிக்கப்பட்டது. இதில், காஞ்சிபுரம் மாவட்டம் பூங்கண்டத்தை சேர்ந்த சண்டைப் பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) என்பவர் காரை ஓட்டிவந்து டைவ் அடிக்கும் காட்சியில் நடித்துள்ளார்.
அப்போது 3 முறை கார் உருண்ட நிலையில், அதை ஓட்டி வந்த மோகன்ராஜ் மயங்கிய நிலையில் காருக்குள் கிடந்தார். உடனடியாக அவரை மீட்ட படப்பிடிப்பு குழுவினர், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அப்போது, படக்குழுவினர் மோகன்ராஜ் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இது குறித்து கீழையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மோகன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், கார் உருண்டபோது, மோகன்ராஜ் மார்பில் ஸ்டியரிங் வேகமாக மோதியதால் உயிரிழந்தது தெரியவந்தது.
அதன் அடிப்படையில், படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த தயாரிப்பு நிர்வாகி ராஜ்கமல், சண்டைக் கலைஞர் வினோத், கார் உரிமையாளர் பிரபாகரன் ஆகியோர் மீது அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.