விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள படம் ‘மார்கன்’. இதில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். லியோ ஜான் பால் இயக்கியுள்ளார். இதில் விஜய் ஆண்டனியின் தங்கை மகன் அஜய் திஷான் வில்லனாக அறிமுகமாகிறார்.
சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரித்திகா, வினோத் சாகர், பிரிகிடா, அர்ச்சனா, கனிமொழி உட்பட பலர் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 27-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இதன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
அதில் விஜய் ஆண்டனி பேசும்போது, “நான் வாழ்க்கையில் எத்தனை படங்கள் நடித்தாலும் ‘பிச்சைக்காரன்’ போல் ஒரு படம் இனி அமையாது. அந்த அளவுக்கு அற்புதமான படத்தை இயக்குநர் சசி எனக்கு கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் கதையை எடிட்டர் லியோ ஜான் பால் சொன்னதும் நடிக்க முடிவு செய்தேன். பொதுவாக இயக்குநர்கள் கதை சொல்லும்போது ஏதாவது ஒரு விஷயம் புதிதாக இருந்தால் உடனே ஓகே சொல்லி விடுவேன். அப்படித்தான் இந்த ‘மார்கன்’ படத்திலும் நடித்துள்ளேன். நான் வரிசையாகப் படங்களில் நடிப்பதும், தயாரிப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடன் வாங்கித்தான் படம் தயாரிக்கிறேன். ஒழுங்காக வட்டி கட்டுவதால் எப்போது கேட்டாலும் பணம் கொடுக்கிறார்கள்.
என் படங்கள் பெரிய லாபம் சம்பாதிக்காவிட்டாலும், நஷ்டம் ஏற்படுவதில்லை. இவ்வளவு காலமாக எங்கள் தயாரிப்பில் நான் மட்டும்தான் ஹீரோவாக நடித்து வருகிறேன். இனிவரும் காலங்களில் மற்ற ஹீரோக்களை வைத்துப் படத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளோம். நான் நடித்த பிச்சைக்காரன், சைத்தான், கொலைகாரன் என பல படங்களுக்கு நெகட்டிவ்வாக தலைப்பு வைத்துள்ளதாகச் சொன்னார்கள்.
எனக்கு நெகட்டிவ் என்பதே கிடையாது. அந்த படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதில் ஆமை, ஆந்தை முக்கிய கேரக்டரில் நடித்துள்ளன. பொதுவாக ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்று சொல்வார்கள். என்னைப் பொருத்தவரை ஆமையும் ஓர் உயிர்தான். பாசிட்டிவாக பார்த்தால் எல்லாம் நன்மையாக முடியும். இனிவரும் காலங்களில் என் படங்களைத் தவிர்த்துப் பிற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்க உள்ளேன்” என்றார்.