‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு இயக்குநர் கபீர் கான் பதிலளித்துள்ளார்.
கபீர்கான் – சல்மான் கான் இருவரது கூட்டணியில் உருவான படம் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’. இன்றுடன் இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இதனைக் கொண்டாடும் விதமாக கபீர்கான் பேட்டியொன்று அளித்திருக்கிறார். அதில் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்தின் 2-ம் பாகம் குறித்து பேசியிருக்கிறார்.
’பஜ்ரங்கி பாய்ஜான் 2’ தொடர்பாக இயக்குநர் கபீர்கான், “2-ம் பாகம் குறித்து சல்மான் கானுடன் பேசியிருக்கிறோம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அனைத்து படங்களின் 2-ம் பாகமும் வெற்றி பெறுகிறது என்பதற்காக ‘பஜ்ரங்கி பாய்ஜான் 2’ எடுக்க விரும்பவில்லை. அதற்கான ஏற்ற கதை அமைந்தால் மட்டுமே, 2-ம் பாகத்தை உருவாக்க நானும் சல்மான் கானும் உறுதியாக இருக்கிறோம்.
முதல் பாகத்தின் வெற்றியை வைத்து 2-ம் பாகத்தை உருவாக்கி பணம் சம்பாதிக்க விரும்பவில்லை. முதல் பாகத்தின் அழகை, வெற்றியை கெடுக்க விரும்பவில்லை. எப்போது 2-ம் பாகத்துக்கான கதை உருவானாலும் கண்டிப்பாக சல்மான் கானை வைத்து இயக்குவேன். எனது திரையுலக வாழ்வில் எப்போதுமே 2-ம் பாகங்களை உருவாக்கவில்லை. ஆனால், ‘பஜ்ரங்கி பாய்ஜான் 2’ உருவானால் ரசிகர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் என்பது தெரியும்” என்று தெரிவித்துள்ளார் கபீர் கான்.
‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்தின் கதையை ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதியிருந்தார். ஜூலை 17, 2015-ம் ஆண்டு வெளியான இப்படம் கொண்டாடப்பட்டது. உலகளவில் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்ததாக செய்திகள் வெளியாகின.