சிவதாணுபுரம் என்கிற கிராமத்தில் ஆதிக்க சாதியினர் பெரும்பான்மையாகவும் பட்டியலின மக்கள் சிறுபான்மையாகவும் வசிக்கிறார்கள். பொதுத் தொகுதியாக இருக்கும் அதன் ஊராட்சிமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்த வகையிலும் முன்னேறவில்லை. ஆனால், சாதிப்பற்று, சாதி வெறியில் முன்னேறியிருக்கும் அந்த ஊர், பட்டியலின வேட்பாளருக்கான தனித் தொகுதியாக மாறுகிறது. கொதித்தெழும் ஆதிக்க சாதியினர், பட்டியலின வேட்பாளரைக் கொலை செய்கிறார்கள். அதன் விளைவாகப் பழையபடி பொதுத் தொகுதியாகி, 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனித் தொகுதியாகிறது. இம்முறை, ஏதும் செய்ய முடியாமல் ஒரு பொம்மை வேட்பாளரை ஆதிக்க வர்க்கம் நிறுத்த, அவருக்குப் போட்டியாகக் களமிறங்குகிறார், முன்பு கொலை செய்யப்பட்டவரின் பேத்தியான அமுதா. இதை எதிர்பார்க்காத வர்கள், அமுதாவைத் தோற்கடிக்க என்ன செய்கிறார்கள், அதை அமுதா எப்படி எதிர்கொண்டார் என்பது கதை.
அமுதா என்கிற சாமானியப் பெண், தன் குடும்பத்தின் பேரிழப்பு உருவாக்கிய வலி, தன்னுடைய மக்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குதல்கள் ஆகியவற்றிலிருந்து எழுச்சிபெற்று முன்னேறும் பெண் போராளியாகப் படைத்திருக்கிறார், எழுதி, இயக்கி, ஒரு கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் வெண்பா கதிரேசன்.
ஒப்பனை பெரிதாக இல்லாமல், எளிய தோற்றத்தில் அமுதாவாக வரும் மதுமிதாவின் நடிப்பு இப்படத்தின் கதைக் களத்தை உயிரூட்டியிருக்கிறது. அமுதாவுக்கு எதிராகப் பரப்பப்படும் அவதூறுகள், பொய்ப் பிரச்சாரம், மிரட்டல்கள், கொலைவெறித் தாக்குதல் எனப் பதைபதைக்க வைக்கும் தடைகளைக் கடந்து வரும் காட்சிகளில், கண்களில் அதிகார வேட்கையை உறுதியாகத் தாங்கி, அமுதாவாக அவர் வசனம் பேசும் காட்சிகளில் அனல் பறக்கிறது.
துணைக் கதாபாத்திரங்களில் வரும் பலரையும், பெரும்பாலும் மண்ணின் மக்களையே நடிக்க வைத்திருப்பதைப் பாராட்டலாம். அதேநேரம், அமுதாவைக் கொலை செய்ய வருபவர், மனநலம் குன்றிய பெண் போன்ற சில துணைக் கதாபாத்திரங்களைச் செயற்கையாகவும் நாடகத்தனமாகவும் நடமாட விட்டிருப்பதற்குக் கத்தரி வைத்திருக்கலாம்.
எளிய, குரலற்ற மக்கள், தங்களுக்கு அரசமைப்பு வழங்கும் ஆட்சிமன்ற அதிகாரத்தை அடைவதற்கான போராட்டத்தை மையமாக்கிய இக்கதையில், வசனத்தின் பங்கு கூர்மையானதாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து எழுதியிருப்பது, அனைத்துத் தரப்புப் பார்வையாளர்களின் மனதை நிச்சயமாக உலுக்கும். ‘நாளை நமதே’ ஒடுக்கப்பட்டவர்கள் அதிகாரத்தை அடைவதற்காக அழுத்தமான பயணம்.