நான் யார் என்பது மக்களுக்கு தெரியும் என்று பாலா தெரிவித்துள்ளார்.
சமீப நாட்களாக நடிகர் பாலா செய்த உதவிகள் அனைத்துமே போலியானது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதனை முன்வைத்து பல்வேறு வீடியோ பதிவுகள் இணையத்தில் உலவத் தொடங்கின. இதனைத் தொடர்ந்து இது தொடர்பான விளக்கமொன்றை வீடியோ வடிவில் வெளியிட்டார் பாலா.
மேலும், கோயம்புத்தூரில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துக் கொண்டார் பாலா. அந்த நிகழ்ச்சியின் முடிவில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரிடம் சமீபத்திய சர்ச்சைகள் குறித்த கேள்வி எழுப்பினர். அதற்கு பாலா, “கெட்டது பண்ணினால் தான் பிரச்சினை வரும் என்பார்கள். நல்லது பண்ணினால் இங்கு ரொம்ப பிரச்சினை வருகிறது. என்னை பற்றி தவறாக பேசி யூடியூப்பில் வீடியோ போட்டு காசு வருகிறது. அதை வைத்து அவர்கள் சந்தோஷமாக இருந்தால், நமக்கும் சந்தோஷம் தான்.
என் பக்கம் அனைத்தும் சரியாக இருக்கிறது. நான் யார் என்பது மக்களுக்கு தெரியும். சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்து வீடியோ போட்டபோது கூட, ஏன் விளக்கம் எல்லாம் கொடுத்துக் கொண்டு நீ யார் என்று எங்களுக்கு தெரியும் என பலர் மெசேஜ் செய்தார்கள். நான் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறேன், எவ்வளவு ஓடுகிறேன் என்று எனக்கு தெரியும். நான் யாரிடமாவது காசு வாங்கி ஏமாற்றியிருந்தால் என் மீது புகார் கொடுக்கட்டும். சும்மா உட்கார்ந்து பேசிக் கொண்டு தானே இருக்கிறார்கள். எவ்வளவு தடங்கல்கள் வந்தாலும் மக்களுக்காக உழைத்துக் கொண்டு தான் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார் பாலா.