சென்னை: ‘நான் தவறு செய்யாதபோது என்னால் மன்னிப்புக் கேட்க முடியாது’ என்று கன்னட மொழி சர்ச்சை விவகாரத்தில் நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கூறுகையில், “நான் தவறாக இருந்தால் மட்டுமே, மன்னிப்புக் கேட்பேன். நான் தவறு செய்யவில்லை. அதனால் மன்னிப்புக் கேட்கப்போவதும் இல்லை. இதுதான் என் வாழ்க்கை முறை. தயவுசெய்து அதைக் குழப்ப வேண்டாம். இந்தியா ஒரு ஜனநாயக நாடு, நான் சட்டத்தையும் நீதியையும் நம்புகிறேன். கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா மீதான எனது அன்பு உண்மையானது.
உள்நோக்கம் கொண்டவர்கள் மட்டுமே அதனைச் சந்தேகிப்பார்கள். இதற்கு முன்பு நான் பல மிரட்டல்களைச் சந்தித்திருக்கிறேன். நான் தவறாக இருந்தால் மன்னிப்புக் கேட்கலாம். நான் தவறு செய்யவில்லை. அதனால் மன்னிப்புக் கேட்கப்போவதும் இல்லை” என்று தெரிவித்துள்ளார். கன்னட மொழி குறித்த தனது கருத்துக்காக கமல்ஹாசன் மன்னிப்புக்கேட்க வேண்டும், இல்லையென்றால் அவரின் படத்தைப் புறக்கணிப்போம் என்று கன்னட ஆதரவு அமைப்புகள் மிரட்டல் விடுத்திருக்கும் நிலையில் கமல்ஹாசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழில் இருந்து கன்னடம் பேச்சு: முன்னதாக, இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார். விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், ”கன்னட நடிகர் ராஜ் குமாருடைய குடும்பம் அந்த ஊரில் (கர்நாடகாவில்) இருக்கும் என்னுடைய குடும்பம். தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதனை நீங்களும் (சிவராஜ்குமார்) ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.
கமல்ஹாசனின் இந்தப் பேச்சுக்கு கர்நாடகாவில் கன்னட ரக்ஷன வேதிகே, கன்னட சலுவளி உள்ளிட்ட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பெங்களூருவில் உள்ள வணிக வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த தக் லைஃப் படத்தின் விளம்பர பதாகைகளை கிழித்து எறிந்தனர். சமூக வலைதளங்களில் இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் எனவும், கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கக் கூடாது எனவும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அன்பினால் சொன்னது: இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ”அரசியல்வாதிகள் மொழி குறித்து கருத்து சொல்வதற்கு தகுதியற்றவர்கள். மொழியியல் அறிஞர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள் அதுபற்றி கருத்து சொல்லட்டும். தமிழகத்தில் எனக்கு நெருக்கடி வந்தபோது, கன்னடர்கள் தங்களது ஊருக்கு வருமாறு என்னை அழைத்தார்கள். அன்பின் காரணமாகவே நான் அவ்வாறு கூறினேன். அன்பு எப்போதும் மன்னிப்பை எதிர்ப்பார்க்காது” என்று கூறியிருந்தார்.
சிவராஜ் குமார் ஆதரவு: இதனிடையே, பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கன்னட நடிகர் சிவராஜ் குமார், “கமல்ஹாசன் எப்போதும் கன்னட மொழி குறித்து உயர்வாகவே பேசுவார், பெங்களூரு குறித்து மிகுந்த அபிமானம் கொண்டவர். நமது நகரைப் பற்றி அவர் எப்போதும் பெருமையாக பேசுவார். கேமராக்களுக்கு முன்பு கன்னட மொழி பற்றி பெருமை பேசுவது மட்டும் போதாது. வார்த்தைகளை விட செயல் முக்கியமானது. கன்னட சினிமாவுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? புதியவர்களுக்கு நீங்கள் வாய்ப்பளித்தீர்களா? கமல்ஹாசனை பொறுத்தவரை நான் வேறு எதுவும் சொல்லத் தேவையில்லை. அவர் ஏற்கெனவே கன்னட சினிமாவுக்கு நிறைய பங்களித்திருக்கிறார்” என்று சிவராஜ் குமார் தெரிவித்திருந்தார்.