“நல்லது செய்வது தான் அரசியல் என்றால், நான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன்” என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும் போது விஷால் குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் 25-ம் தேதி மறைந்த நடிகர் மற்றும் தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் பிறந்த நாள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ‘மகுடம்’ படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி பரிமாறப்பட்டது. விஷால் படக்குழுவினருடன் இணைந்து விஜயகாந்த் படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் விஷால் பேசும்போது, “மறக்க முடியாத ஒரு நபர், நடிகர், அரசியல்வாதி. எந்த துறைக்கு சென்றாலும் அதில் முன்னுதாரணமாக இருந்திருக்கிறார். தான் சாப்பிடும் உணவு தான் படப்பிடிப்பு தளத்தின் கடைசி ஊழியர் வரை சாப்பிட வேண்டும் என்று கொண்டுவந்தவர் விஜயகாந்த் சார். அவர் இன்று இல்லை என்றாலும் எப்போதுமே கொண்டாடப்படுவார். அவர் இப்போது இருந்திருந்தால் 2026-ம் ஆண்டு தேர்தல் வேறு மாதிரி இருந்திருக்கும்.
விஜயகாந்த் சாருடைய கனவு நடிகர் சங்கக் கட்டிடம். அது கண்டிப்பாக நனவாகும். இன்னும் 2 மாதங்களில் அப்பணிகள் முடிவடையும். சினிமாவை பொறுத்தவரை ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து, மத்திய, மாநில அரசுகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்துள்ளோம். சூதாட்டத்திற்கும் சினிமவிற்கும் ஒரே மாதிரி வரி விதிப்பதில் மாற்றம் கொண்டுவரவேண்டும். அதே போல் உள்ளாட்சி வரியை குறைக்க மாநில அரசையும் கேட்டிருக்கிறோம். தற்போது தமிழக அரசு ரூ.5 கோடியில் திறந்து வைத்துள்ள படப்பிடிப்பு தளம் வரவேற்கத்தக்கது.
விஜய் சார் கட்சியின் 2-வது மாநாடு நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. அவருக்கு என் வாழ்த்துகள். புது அரசியல்வாதி களத்தில் இறங்கும் போது அனைவரும் வாழ்த்த வேண்டும். ஏனென்றால் சமூக சேவை செய்வதற்கு இன்னொரு கட்சி வருகிறது.
ஒரு வாக்காளராக சொல்கிறேன். இன்னும் செயல்படுத்தப்படாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அதனை 2026-ன் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் கொண்டு வந்து செய்ய வேண்டும். விஜய் ஆக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி செயல்பாட்டுக்கு வந்தால் சந்தோஷம். நல்லது செய்வது தான் அரசியல் என்றால், நான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன்” என்று பேசினார் விஷால்.