‘தி பாரடைஸ்’ படத்தில் நானியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மோகன் பாபு.
‘ஹிட் 3’ படத்தைத் தொடர்ந்து, ‘தி பாரடைஸ்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நானி. இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது பிரம்மாண்ட சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கி வருகிறது படக்குழு. நானியின் திரையுலக வாழ்வில் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் இது.
தற்போது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன்பாபு நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. தனது தயாரிப்பு, மகன் விஷ்ணு மஞ்சு நடிக்கும் படம் உள்ளிட்டவற்றில் மட்டுமே சமீபமாக மோகன் பாபு நடித்து வந்தார். நீண்ட வருடங்கள் கழித்து மற்றொரு நடிகரின் படத்தில் மோகன்பாபு நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. நானி, மோகன் பாபு, பாபு மோகன், ராகவ் ஜூயல் உள்ளிட்ட பலர் ‘தி பாரடைஸ்’ படத்தில் நடித்து வருகிறார்கள்.
சுதாகர் தயாரித்து வரும் இப்படத்தினை ‘தசரா’ இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கி வருகிறார். ‘அமரன்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த சாய் ஒளிப்பதிவாளராகவும், இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்து வருகிறார்கள். அடுத்த ஆண்டு மார்ச் 26-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.