பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி தயாரிக்கும் இப்படத்தின் பூஜை கோலகலமாக நடைபெற்றது. இதில் லைகா நிறுவன தயாரிப்பாளர் சுபாஸ்கரன், நடிகர் ஜீவா, ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா, இயக்குநர் நிதீஷ் சகாதேவ் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
தமிழ் திரையுலகில் மறக்க முடியாத காமெடி கூட்டணிகளில் ஒன்று பிரபுதேவா – வடிவேலு கூட்டணி. இவர்கள் இணைந்த காமெடி காட்சிகள் இப்போதும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கூட்டணி இணைந்துள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைக்கவுள்ளார். முழுக்க காமெடி கலந்த ஆக்ஷன்படமாக இதன் கதையினை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் சாம் ரோட்ரிகஸ்.
நவம்பர் மாதம் தொடங்கவுள்ள இப்படத்தில் பப்லு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும், ஒளிப்பதிவாளராக விக்னேஷ் வாசு, சண்டைக் காட்சிகளின் இயக்குநராக பீட்டர் ஹெய்ன், எடிட்டராக ஆண்டனி ஆகியோர் பணிபுரியவுள்ளனர். ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்கும் வகையில் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டு வருகிறது.