மணிரத்னம் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு புகழாரம் சூட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன். அதில் தங்கள் இருவரின் திரையுலகப் பயணம் குறித்து அவர் விவரித்துள்ளார்.
இந்திய திரையுலகின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு தற்போது கமல் – மணிரத்னம் இணைந்து ‘தக் லைஃப்’ படத்தில் பணிபுரிந்துள்ளனர்.
அனைத்து மொழிகளிலும் ‘தக் லைஃப்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இப்படம் ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ளது. இன்று மணிரத்னம் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.
அதில், “‘நாயகன்’ முதல் ‘தக் லைஃப்’ வரையில் நாம் இருவரும் ஒன்றாக பயணித்துள்ளோம். சக கலைஞர்களாக, குடும்பத்தினராக, இணைந்து கனவு காண்பவர்களாக மற்றும் அனைத்துக்கும் மேலாக சினிமாவின் மாணவர்களாக இந்தப் பயணம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வோர் அத்தியாயத்திலும் உங்களது இருப்பு பலமான ஆதாரமாக உள்ளது. திரை மொழியோடு ஆழமாக இணைந்த ஓர் உயிர். உங்களது கதைகளை தொடர்ந்து சொல்லுங்கள். ஒவ்வொரு ஃப்ரேமிலும் உங்களது பார்வை சினிமாவுக்கு அழகு மற்றும் அர்த்தத்தைக் கொண்டு வருகிறது. பிறந்த நாள் வாழ்த்துகள் மணிரத்னம். என்றும் உங்கள் நண்பர் கமல்ஹாசன்” என்று குறிப்பிட்டுள்ளார்.