தமிழில் ‘குத்து’, ‘பொல்லாதவன்’, ‘வாரணம் ஆயிரம்’ உள்பட சில படங்களில் நடித்திருப்பர் கன்னட நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா. கன்னட நடிகர் தர்ஷன், தனது ரசிகரான ரேணுகாசாமியை கடத்திக்கொலை செய்த வழக்கில் கைதாகிசிறை சென்றார். இப்போது ஜாமீனில் இருக்கிறார். அதை எதிர்த்து கர்நாடக அரசு தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இதுபற்றி ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சாதாரண குடிமகனுக்கு உச்ச நீதிமன்றம்தான் நம்பிக்கை அளிக்கும். சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமியின் குடும்பத்துக்கு நீதி கிடைக்கும் என நான் நம்புகிறேன்” என கூறியிருந்தார்.
இதனால், தர்ஷன் ரசிகர்கள் ரம்யாவுக்கு கண்டனம் தெரிவித்து, ஆபாசத் தகவல்களை அனுப்பியுள்ளனர். சிலர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல்கள் விடுத்தனர். இந்நிலையில் தனக்கு ஆபாச தகவல்கள் அனுப்பிய 11 பேரின் பெயர்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட ரம்யா, அவர்கள் மீது சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், ரம்யா குறித்து அவதூறு பதிவுகள் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங்கிற்கு கர்நாடக மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. “ரம்யாவுக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. இது பெண்களின் கண்ணியத்தைப் பாதிக்கிறது. அவதூறு பதிவுகளை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.