தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள கல்பிகா கணேஷ், தமிழில் ‘பரோல்’ படத்தில் நடித்துள்ளார். இவர் சமீபகாலமாக அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஹைதராபாத்தில் உள்ள பப் ஒன்றுக்கு நண்பர்களுடன் சென்ற இவர், அங்கு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பொருட்களைச் சேதப்படுத்தியதாக பப் நிர்வாகம் புகார் அளித்தது. இதனால் போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர், இன்ஸ்டாகிராமில், தகாத வார்த்தைகளால் திட்டியதாக இளம் பெண் ஒருவர், சைபராபாத் போலீசில் கல்பிகா மீது புகாரளித்தார். இதுதொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றுள்ளது. சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றுக்குச் சென்ற அவர், அங்குள்ள மெனு கார்டுகளை வீசி, ரகளை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது மகள் மனநலப் பிரச்சினையில் சிக்கி இருப்பதாக அவருடைய தந்தை சங்கவர் கணேஷ், கச்சுபவுலி போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில், “கல்பிகா கடுமையான மனநலப் பிரச்சினையால் போராடி வருகிறார். அது அவருக்கும் தங்களுக்கும் பொதுமக்களுக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. அவர் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை 2 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டார். மன உளைச்சலால் தொடர்ந்து பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார். அவரை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க வேண்டும்” என கூறியுள்ளார்.