சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் உடல், வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி சடங்கின்போது ஏராளமான திரைக் கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள், பொது மக்கள், ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
பிரபல நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் காமாலை காரணமாக கடுமையாக உடல் எடை குறைந்து காணப்பட்டார் ரோபோ சங்கர். பின்னர் மெல்ல தேறி வந்த அவர் மீண்டும் திரைப்படங்களிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் தோன்றினார்.
இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று (செப்.18) சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிரிழந்தார்.ரோபா சங்கரின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மநீம தலைவர் கமல்ஹாசன், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், நடிகர்கள் சத்யராஜ், தனுஷ், சிவகார்த்திகேயன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், பாண்டியராஜன், எஸ்.ஏ.சந்திரசேகர், சினேகன், செந்தில் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மேலும், பல்வேறு திரையுலகினர், சின்னத்திரை கலைஞர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களும் ரோபோ சங்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இன்று மாலை ரோபோ சங்கரின் உடல், வளசரவாக்கத்தில் உள்ள அவரின் வீட்டிலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. ஏராளமான மக்கள் கலந்துகொண்டதால், ஒன்றரை மணி நேரம் அவரின் இறுதி ஊர்வலம் நடந்தது. இதனையடுத்து, வளசரவாக்கம் பிருந்தாவன் நகரில் உள்ள மின் மயானத்தில் ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது. ரோபோ சங்கருக்கு அவரின் மகளும், மருமகனும் இறுதி சடங்குகளை செய்தனர். ரோபோ சங்கரின் இறுதி சடங்கின்போது ஏராளமான திரைக் கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
ரோபோ சங்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் துவங்கி, சின்னதிரை, வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் ரோபோ சங்கர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.