சென்னை: படத்தில் நடிக்க முன்பணமாக பெற்ற ரூ. 6 கோடியை திருப்பி செலுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யாத நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்கும் வகையில் மனு தாக்கல் செய்ய படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிட்டெட் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவில், “எங்களது நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க திட்டமிடப்பட்ட 2 படங்களில் நடிப்பதற்காக நடிகர் ரவி மோகனுடன் கடந்தாண்டு செப்டம்பரில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதல் படத்துக்கு ரூ. 15 கோடி ஊதியமாக பேசப்பட்டு, ரூ. 6 கோடி முன்பணமாக வழங்கப்பட்டது.
ஒப்பந்தப்படி தங்களது நிறுவனத்தின் படத்தில் நடிக்காமல் மற்ற நிறுவன படங்களில் அவர் நடித்ததால் கொடுத்த முன்பணத்தை திருப்பிக் கேட்டோம். இதுவரையிலும் அவர் எங்களிடம் வாங்கிய ரூ.6 கோடியை திருப்பித்தரவில்லை. ஆனால் தற்போது ரவி மோகன் தனது சொந்த படத் தயாரிப்பு நிறுவனம் மூலமாக புதிதாக படம் ஒன்றை தயாரித்து வருகிறார். எனவே, எங்களிடம் வாங்கிய ரூ.6 கோடியை வட்டியுடன் சேர்த்து வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த மனு கடந்த முறை நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியனும், நடிகர் ரவி மோகன் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.கார்த்திகைபாலனும் ஆஜராகி வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ரூ.6 கோடிக்கான சொத்து உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி அப்துல்குத்தூஸ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, “உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி நடிகர் ரவி மோகன், சொத்து உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவி்ல்லை. எனவே எங்களுக்கு செலுத்த வேண்டிய ரூ.6 கோடி பாக்கிக்காக அவரது சொத்துகளை முடக்கும் வகையில் மனு தாக்கல் செய்ய அனுமதியளிக்க வேண்டும்” எனக் கோரினார். அதையேற்ற நீதிபதி, இதுதொடர்பாக மனு தாக்கல் செய்ய படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார்.