விஜய் மில்டன் இயக்கவுள்ள படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாக இருக்கிறார் இசையுலகில் பிரபலமான பால் டப்பா.
இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் அடுத்ததாக தமிழ் – தெலுங்கில் உருவாகும் படத்தை இயக்கவுள்ளார். இதில் ராஜ் தருண் நாயகனாக நடிக்கவுள்ளார். அவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படமாக இது அமைந்திருக்கிறது. தற்போது அவருடன் இசை உலகில் கவனம் பெற்ற ‘பால் டப்பா’ இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக இருக்கிறார்.
பால் டப்பா நடிகராக அறிமுகமாவது குறித்து விஜய் மில்டன் குறிப்பிடும்போது, “பால் டப்பாவிடம் இருக்கும் இயல்பான, இளைஞர்களை உற்சாகப்படுத்தும் ஆற்றல் இந்தப் படத்தின் உணர்வுகளோடு பொருந்துகிறது. அவர் உண்மையாக வாழும் கலைஞர், அந்த நேர்மையே இந்தக் கதாபாத்திரத்துக்கு தேவை” என்று தெரிவித்துள்ளார்
ராஜ் தருண், பால் டப்பா உடன் மேலும் சில புதுமுக நடிகர்கள் நடிக்க உள்ளார்கள். அதற்கான தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினை விஜய் மில்டனின் ‘ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது.