‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்கிய விவேக் அக்னிகோத்ரி, இப்போது ‘த பெங்கால் ஃபைல்ஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி என பலர் நடித்துள்ளனர். செப்.5-ல் வெளியாக இருக்கும் இந்தப் படம், 1946-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில், நவகாளி மாவட்டத்தில் நடந்த மதக் கலவரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதனால் இந்தப் படத்துக்கு அம்மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு வேண்டுகோள் விடுத்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘த பெங்கால் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டாம் என்றும், அமைதியான முறையில் திரையிட அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறும்போது, “ இந்தப்படம் மேற்கு வங்கத்தில் தடை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. திரையரங்க உரிமையாளர்கள் தங்கள் மீது அரசியல் அழுத்தம் இருப்பதால் படத்தைத் திரையிட அச்சப்படுவதாகக் கூறுகிறார்கள். ஆக. 16 அன்று படத்தின் டிரெய்லரை ஒரு ஓட்டலில் வைத்து வெளியிட முயற்சித்தோம். ஆனால் போலீஸார் அதைத் தடுத்தனர். நீங்கள் இந்திய அரசியலமைப்பின் மீது சத்தியம் செய்துள்ளீர்கள். ஒவ்வொரு குடிமகனும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையைப் பாதுகாப்பதாகவும் சத்தியம் செய்திருக்கிறீர்கள். இந்தப் படத்தை இந்திய தணிக்கை வாரியம் அங்கீகரித்துள்ளது. அதனால் இந்தப் படத்தை வெளியிடுவதற்கு பொறுப்பேற்க வேண்டியது உங்கள் கடமை” என்று கூறியுள்ளார்.