கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடித்து வரும் படம், ‘த டாக்ஸிக்’. இதில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி என பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படம் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிறது.
ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் ஜேஜே பெர்ரி, இதில் பணியாற்றுகிறார். இவர், ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’, ‘ஜான்விக்’ உள்பட பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ளார். ‘த டாக்ஸிக்’ படத்துக்கான ஆக்ஷன் காட்சிகளின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது. அங்கு 45 நாட்கள் நடக்க இருக்கிறது.
இதுபற்றி ஜேஜே பெர்ரி அளித்துள்ள பேட்டியில், “இப்போது ஒரு முக்கிய காட்சியைச் படமாக்குகிறோம். அதில் நான் ஆர்வமாக இருக்கிறேன். ஏனென்றால் இது சவாலானது. எனக்கு சவால்கள் பிடிக்கும் என்பதால் எல்லைகளை தாண்ட இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். சமீபகாலமாக ஆக்ஷன் காட்சிகளைப் படமாக்கும்போது அதிக விபத்துகள் ஏற்படுவதால், இந்தப் படப்பிடிப்புக்கு முன் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.