தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 200-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள சரோஜாதேவி, தனது 87 -வது வயதில் நேற்று காலமானார். அவருடைய சினிமா பயணம் பற்றிய விவரம் வருமாறு:
சரோஜாதேவி, 1938-ம் ஆண்டு ஜன.7-ம் தேதி மைசூரு அருகே சென்னபட்ணாவில் பிறந்தார். அவர் இயற்பெயர் ராதாதேவி. சினிமாவுக்காக சரோஜாதேவி ஆனார். இவர் தந்தை பைரப்பா போலீஸ் அதிகாரி. தாய் ருத்ரம்மா குடும்பத் தலைவி. இந்த தம்பதியின் 4வது மகளாக பிறந்த சரோஜாதேவி, தனது 17 வயதில், 1955-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘மகாகவி காளிதாசா’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
ஹொன்னப்ப பாகவதர் நாயகனாக நடித்த இந்தப்படம் தமிழில் ‘மகாகவி காளிதாஸ்’ என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. பின்னர் ஜெமினி கணேசனின் ‘திருமணம்’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி தமிழ் சினிமாவுக்கு வந்தார் சரோஜாதேவி.
இதில் அவருடைய நடனத்தைப் பார்த்து ரசித்த இயக்குநர் கே.சுப்பிரமணியம், அவர் கன்னடத்தில் இயக்க இருந்த ‘கச்ச தேவயானி’ படத்தில் நாயகியாக்கினார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. படப்பிடிப்பு இடைவேளையில், இயக்குநர்
படப்பிடிப்பு இடைவேளையில், இயக்குநர் கே.சுப்பிரமணியத்தின் மகளும் பரத நாட்டிய கலைஞருமான பத்மா சுப்பிரமணியத்துடன் சென்னையைச் சுற்றிப் பார்க்கச் சென்று விடுவார். ஒரு முறை, மெரினா கடற்கரையைச் சுற்றிக் காட்ட அழைத்துச் சென்றபோது, அங்கு கதாசிரியர் சின்ன அண்ணாமலையைச் சந்தித்தார் பத்மா சுப்பிரமணியம். அப்போது அருகில் நின்ற சரோஜாதேவியை காண்பித்து, “இவர், அப்பா இயக்கும் கன்னடப் படத்தில் நடிக்கிறார்; தமிழ்ப் படத்தில் வாய்ப்பு கிடைத்தாலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.
‘யவ்வனமே என் யவ்வனமே’: இதை மனதில் வைத்துக் கொண்ட சின்ன அண்ணாமலை, தான் கதை எழுதி, தயாரித்த ‘தங்கமலை ரகசியம்’ படத்தின் இயக்குநர் பி.ஆர்.பந்துலுவிடம் சரோஜாதேவி பற்றிச் சொல்ல, அந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமும் சிறு காட்சியில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது அவருக்கு. ‘யவ்வனமே என் யவ்வனமே’ என்ற அந்தப் பாடலும் நடனமும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து ‘மானமுள்ள மறுதாரம்’ என்ற படத்தில் நாயகியாக நடித்தார் சரோஜாதேவி. இந்தப் படம் சரியான வெற்றியைப் பெறவில்லை.
எம்.ஜி. ஆருடன் 26 படங்கள்: தமிழ் சினிமாவில் அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த எம்ஜிஆர், சிவாஜி கணேசனுடன் அதிக படங்களில் நடித்தவர் இவர். எம்.ஜி. ஆர்- சரோஜாதேவி ஜோடி அப்போது வெற்றிகரமான ஜோடியாகப் பேசப்பட்டது. அவருடன் 26 படங்களிலும், சிவாஜியுடன் 22 படங்களிலும் நடித்துள்ளார், சரோஜாதேவி. ஜெமினி கணேசனுடன் 17 படங்களில் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆருடன் அவர் நடித்த கடைசிப் படம் ‘அரசக்கட்டளை’. எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்கி நடிப்பதாக இருந்த கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையில் மணிமேகலை கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் சரோஜாதேவி. ஆனால், அந்த படம் உருவாக்கப்படவில்லை.
தெலுங்கில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ் உள்பட அந்த காலகட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ள அவர், இந்தியில் திலீப் குமாருடன் ‘பைகாம்’, ராஜேந்திர குமாருடன் ‘சாசுரால்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், பிரபல இந்தி நடிகர்களான சுனில் தத், ஷம்மி கபூர், ராஜ்கபூர் ஆகியோருடன் நடித்துள்ளார்.
1970 மற்றும் 80-களில் கனவுக் கன்னியாக வலம் வந்த சரோஜாதேவி, ‘புதிய பறவை’ படத்தில் சிவாஜியை காதலிப்பதாக ஏமாற்றும் வசனம் பிரபலமானது. ‘கோப்பால்…கோப்பால்…’ என்று அவர் கொஞ்சும் குரலில் பேசியது இப்போதும் பிரபலம்.
பேஷன் ஐகான்: தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என மொத்தம் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள சரோஜா தேவி, தென்னிந்திய சினிமாவின் ‘பேஷன் ஐகானா’க இருந்தவர். அவர் ஹேர்ஸ்டைல், சேலை, ஜாக்கெட், நகைகள் போன்றவற்றை அந்த காலத்து இளம்பெண்கள் பின்பற்றினர்.
‘கன்னடத்துப் பைங்கிளி’ என்றும் ‘அபிநய சரஸ்வதி’ என்றும் அழைக்கப்பட்ட சரோஜாதேவி, வெற்றிகரமான நடிகைகளில் ஒருவர். இந்திய சினிமாவில் 161 படங்களில் கதாநாயகியாக நடித்த ஒரே நடிகை இவர்தான் என்கிறார்கள். அந்த காலகட்டத்தில் தெலுங்கு சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை இவர்.
திருமணம்: சரோஜாதேவி 1967-ம் ஆண்டு, பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஹர்ஷா என்ற பொறியாளரைத் திருமணம் செய்துகொண்டார். அந்த காலத்தில் திருமணமாகிவிட்டால் நடிகைகளுக்கு வாய்ப்பு குறைந்துவிடும். ஆனால், சரோஜாதேவிக்கு வாய்ப்பு அதிகரித்தது. அவர் கணவரும் நடிப்புத் தொழிலுக்கு ஆதரவாக இருந்தார்.
கன்னடம், தமிழ், தெலுங்கில் தொடர்ந்து நாயகியாக நடித்து வந்தார். 1986-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் ஹர்ஷா காலமானதால் ஒரு வருடம் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த சரோஜாதேவி, 1986-ம் ஆண்டுக்கு முன் ஒப்புக்கொண்ட, தாய்மேல் ஆணை, தர்ம தேவன் உள்பட 8 திரைப்படங்களை முடித்துக் கொடுத்தார். பின்னர் 5 வருடம் நடிக்காமல் இருந்த சரோஜா தேவி, அதற்குப் பிறகு குணசித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழில் கடைசியாக சூர்யாவின் ‘ஆதவன்’ (2009) படத்தில் நடித்திருந்தார்.
இந்திய அரசின் உயரிய விருதான பத்ம யை 1969-ம் ஆண்டும், பத்ம பூஷண் விருதை 1992-ம் ஆண்டும் பெற்ற சரோஜாதேவி, மத்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருதை 2008-ம் ஆண்டு பெற்றார். மேலும் பல மாநில அரசுகளின் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் சில நடிகைகள் மட்டுமே தனித்துவத்துடன் இருந்திருக்கிறார்கள். தனது பேச்சாலும் அழகாலும் ரசிகர்களைக் கவர்ந்த சரோஜாதேவி, திரையுலகமும் ரசிகர்களும் மறக்க முடியாத நடிகையாக இருப்பார் என்கிறார்கள்.
நாடோடி மன்னன்: 1958-ம் ஆண்டு எம்ஜிஆரின் ‘நாடோடி மன்னன்’ படத்தில் நடித்த பிறகுதான் அவர் சிறந்த நடிகையாக அடையாளம் காணப்பட்டார். அதில் சரோஜாதேவி நடித்த இளவரசி ரத்னா கதாபாத்திரம் அவரை தமிழகம் முழுவதும் கொண்டு சென்றது. அவர் புகழும் பரவியது. இந்தப்படம் அவரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் உயர்த்தியது.
இதையடுத்து ஸ்ரீதரின் ‘கல்யாண பரிசு’ (1959), சிவாஜியின் ‘பாகப்பிரிவினை’ (1959), எம்.ஜி.ஆருடன் ‘திருடாதே’ (1961), ‘தாய் சொல்லைத் தட்டாதே’ (1961), ‘பாசம்’ (1962), ‘படகோட்டி’ (1964),‘எங்க வீட்டுப் பிள்ளை’ (1965), ‘அன்பே வா’ (1966), சிவாஜியின் ‘பாலும் பழமும்’ (1961), ‘ஆலயமணி’ (1962), ‘புதிய பறவை’ (1964) என அவர் நடித்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.