‘துடரும்’ இயக்குநர் தருண்மூர்த்தி இயக்கத்தில் கார்த்தியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தருண்மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘துடரும்’. மாபெரும் வசூல் சாதனை படைத்த இப்படம் பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்தும் வெளியிடப்பட்டது. இதன் இயக்குநர் தருண்மூர்த்தியை பல்வேறு திரையுலக பிரபலங்களும் பாராட்டியிருந்தார்கள். மேலும், அவருடைய அடுத்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது.
தற்போது தருண்மூர்த்தி இயக்கத்தில் கார்த்தியை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இதனை ‘கருடன்’ மற்றும் ‘மாமன்’ படங்களைத் தயாரித்த குமார் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக விசாரித்த போது, இப்போதைக்கு ‘மார்ஷல்’ மற்றும் ‘கைதி 2’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தவுள்ளார் கார்த்தி. அதனைத் தொடர்ந்து வேறு எந்தவொரு படத்துக்கும் கார்த்தி சம்மதம் தெரிவிக்கவில்லை என்கிறார்கள். விரைவில் உண்மை என்ன என்பது தெரியவரும்.