தீபாவளி வெளியீட்டில் இருந்து சூர்யாவின் ‘கருப்பு’ படம் பின்வாங்கி இருக்கிறது. சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் ‘கருப்பு’. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பை தவிர்த்து, மீதமுள்ள அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டன. தற்போது இதன் வெளியீடு எப்போது என்பது பெரும் கேள்வியாக இருந்தது. முதலில் தீபாவளி வெளியீடாக இருக்கும் என்று கருதப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வந்தன.
இதன் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் விற்பனை குறித்து தயாரிப்பு நிறுவனமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் இறுதிகட்டப் பேச்சுவார்த்தையின் படி இந்த ஆண்டு இப்படம் வெளியீடு இருக்காது என்று கூறப்படுகிறது. ஏனென்றால், இந்த ஆண்டுக்கான படங்கள் அனைத்தும் ஓடிடி நிறுவனங்கள் வாங்கி முடித்துவிட்டார்கள். ஆகையால், ‘கருப்பு’ தீபாவளி வெளியீட்டில் இருந்து பின்வாங்கிவிட்டது.
மேலும், இன்னும் சில காட்சிகள் படப்பிடிப்பு வேறு பாக்கி இருக்கிறது. தற்போதைய சூழலில் அக்டோபரில் தீபாவளி வருகிறது. அதனால் வெளியீடு சாத்தியமே இல்லை என்பது தெரிகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பு’. ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யா, த்ரிஷா, ஷிவதா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ், நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ண், இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.