சமுத்திரக்கனி, கெளதம் மேனன் நடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கார்மேனி செல்வம்’. ராம் சக்ரி இயக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு.
இதில் சமுத்திரக்கனிக்கு நாயகியாக லட்சுமிபிரியா, கெளதம் மேனனுக்கு நாயகியாக அபிநயா ஆகியோர் நடித்துள்ளனர். நகைச்சுவை கலந்த சென்டிமெண்ட் கலந்த குடும்ப படமாக ‘கார்மேனி செல்வம்’ உருவாகி இருக்கிறது. இப்படம் குறித்து இயக்குநர் ராம் சக்ரி, “அனைத்து வயதினரும் ரசிக்கக் கூடிய படமாக ‘கார்மேனி செல்வம்’ இருக்கும். அமைதியான, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் செல்வத்திற்கு (சமுத்திரக்கனி) திடீரென்று பணத்தாசை ஏற்படுகிறது. அதை நோக்கி ஓட ஆரம்பிக்கும் போது அவரது வாழ்வில் நடக்கும் சம்பவங்களை திரைக்கதையாக நகைச்சுவையாக அமைத்துள்றோம்” என்று தெரிவித்துள்ளார்.
‘கார்மேனி செல்வம்’ படத்தின் ஒளிப்பதிவாளராக யுவராஜ் தக்ஷன் பணிபுரிந்துள்ளார். இப்படத்தின் இசையின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், தமிழ் திரையுலகில் முதல் முறையாக மியூசிக் ஏஸ் சர்வீஸ் (Music As Service) என்ற புதுமையான முறையில் இசையமைக்கப் பட்டுள்ளது. இந்தப் பணியை மியூசிக் கிளவுட் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனம் திறம்பட செய்துள்ளது.