தீபாவளிக்கு ‘கருப்பு’ வெளியாகுமா என்ற கேள்விக்கு ஆர்.ஜே.பாலாஜி பதிலளித்துள்ளார்.
சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தின் டீஸர், அவரது பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. இதற்கு இணையத்திலும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடுவதற்காக திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக ஆர்.ஜே.பாலாஜி, சாய் அபயங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.
அப்போது ‘கருப்பு’ தீபாவளிக்கு வெளியாகுமா என்று பலரும் ஆர்.ஜே.பாலாஜியிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு “எங்களால் முடிந்தவரைக்கும் சுடச்சுட தீபாவளிக்கு கொடுக்க முயற்சிக்கிறோம். நீங்கள் இப்படம் வரும் நாளை தீபாவளியாகக் கொண்டாடுவீர்கள் என்று தெரியும். ஒரு வருடமாக இந்தப் படத்தில் தான் பணிபுரிந்து கொண்டிருக்கிறோம்.
சாய் அபயங்கரின் இசைக்கு பயங்கர வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படம் தொடங்கியவுடன் ஒரே ஒரு முறை மட்டுமே பேசினேன். அதில் கூறியது போல, அந்த சத்தியம் நிறைவேற்றப்படும்” என்று பதிலளித்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வரும் படம் ‘கருப்பு’. ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் இப்படத்தில் சூர்யா, த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, ஸ்வாசிகா, அனகா மாயா ரவி, ஷ்வதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.