‘தி பாரடைஸ்’ படத்திலிருந்து மோகன் பாபுவின் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி பாரடைஸ்’. இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதன் போஸ்டர்கள், உருவாகும் விதம் வீடியோக்கள் உள்ளிட்டவை இணையத்தில் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன.
இப்படத்தில் மோகன் பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், படக்குழு உறுதிப்படுத்தாமல் இருந்தது. தற்போது ’ஷிகஞ்சா மாலிக்’ என்ற கதாபாத்திரத்தில் மோகன் பாபு நடிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது படக்குழு. மேலும், படத்திலிருந்து அவருடைய லுக்கை போஸ்டராக வெளியிட்டுள்ளார்கள். இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
நீண்ட காலமாக பெரிதாக வெளி படங்களில் நடிக்காமல் இருந்தார் மோகன் பாபு. ஆனால், ஸ்ரீகாந்த் ஓடிலா கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே ‘தி பாரடைஸ்’ படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். தற்போது நானி, மோகன் பாபு சம்பந்தப்பட்ட காட்சிகளை பிரம்மாண்ட அரங்கில் காட்சிப்படுத்தி வருகிறது படக்குழு. இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 26-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதற்கு இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.