’தி பாரடைஸ்’ படத்தினை ஹாலிவுட்டிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
’தசரா’ இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தி பாரடைஸ்’. இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியானதில் இருந்தே படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதன் போஸ்டர்கள், படப்பிடிப்பு தளத்தின் காட்சிகள் என அனைத்துமே இணையத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றன.
தற்போது இப்படத்தினை ஹாலிவுட்டிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக ஹாலிவுட் #ConnekktMobScene நிறுவனத்தின் அலெக்ஸாண்ட்ரா E. விஸ்கோந்தியை சந்தித்து பேசியிருக்கிறார்கள். இந்தச் சந்திப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. மேலும் பல்வேறு மொழிகள், பல தரப்பு ரசிகர்களிடமும் இப்படத்தினை கொண்டு சேர்க்க வேண்டும் என முடிவெடுத்துள்ளது படக்குழு.
மேலும், இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் கொண்ட பிரபல ஹாலிவுட் நடிகரை படத்தில் நடிக்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்க்க முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு. இப்படத்தின் மூலம் பாலிவுட் நடிகர் ராகவ் ஜுயால் தெலுங்கில் அறிமுகமாகிறார்.
’தி பாரடைஸ்’ படத்தின் ஒளிப்பதிவாளராக சாய், இசையமைப்பாளராக அனிருத், எடிட்டராக நவீன் நூலி ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தினை அடுத்தாண்டு மார்ச் 26-ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். ஒரே சமயத்தில் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், பெங்காலி, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் என 8 மொழிகளில் வெளியாகிறது.