திரையரங்கில் இஷ்டத்துக்கு காட்சிகள் தருகிறார்கள் என்று இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வேதனை தெரிவித்துள்ளார்.
கெளசி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கடுக்கா’. இயக்குநர் முருகராசு இயக்கியுள்ள இப்படம் முழுக்க கிராமிய பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
இந்த விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “படக்குழு ஒரு பாட்டிலேயே ஈர்த்துவிட்டார்கள். படத்தில் பெண்கள் சம்பந்தமாகச் சிறப்பான கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். வாழ்த்துகள். சினிமாவில் நாம் சரிசெய்ய வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது. திரையரங்கில் இஷ்டத்துக்கு காட்சிகள் தருகிறார்கள், எந்தக் காட்சியில் நம்ம படம் ஓடுகிறது என்றே தெரியவில்லை. இதை ஒழுங்குபடுத்த வேண்டும்.
நான் படமெடுத்துக் கொண்டிருந்த காலத்தில் ரஜினி சார் படம் 100 தியேட்டரில் வெளியானால், அடுத்து 16 படங்கள் வெளியாக தியேட்டர் இருக்கும். ஆனால், இப்போது ஒரே படத்தை அனைத்து திரையரங்குகளிலும் போட்டு வசூலை அள்ள, மற்ற படங்களை ஓட விடாமல் செய்து விடுகிறார்கள். குறைந்தபட்சம் சின்ன படங்களுக்கு ஒரு வாரம் 4 காட்சிகள் தர வேண்டும். இதைத் தயாரிப்பாளர் சங்கங்கள் உறுதி செய்ய வேண்டும்.
இந்தப் படத்தை அழகாக எடுத்துள்ளார்கள். இசையமைப்பாளர் ஒரே பாட்டில் கலக்கிவிட்டார். கிராமிய படங்கள்தான் பெரிய வெற்றியைத் தரும். கடுக்கா மிகச் சிறப்பான வெற்றியைப் பெற அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று பேசினார்.