விமர்சனங்கள் பதிவிடுவதை நிறுத்தியது ஏன் என்று அனிருத் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
’கூலி’ படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார் அனிருத். அவர் முழுமையாக படத்தின் பணிகளை முடித்துவிட்டால், படம் எப்படியிருக்கிறது என்பதை எக்ஸ் தளத்தில் இமோஜிக்களாக பதிவிடுவார். இவை இணையத்தில் மிகவும் பிரபலம். சமீபத்திய சில படங்களுக்கு அனிருத் இதனை தவிர்த்து வந்தார். ‘கூலி’ படத்துக்கு இமோஜிக்களை பதிவிடுவார் என்று பலரும் எதிர்நோக்கி இருந்தார்கள்.
இந்த எமோஜிக்கள் பதிவிடுவது தொடர்பாக அனிருத், “சில படங்கள் சரியாக ஓடாது என்பது தெரியும் என்பதால் இமோஜிக்கள் விமர்சனத்தை நிறுத்தினேன். அப்படங்களுக்கு அவ்வாறு பதிவிடுவது சரியாக இருக்காது. மேலும், இமோஜிக்கள் பதிவிடுவது கூடுதல் அழுத்ததைக் கொடுக்கிறது. மக்கள் என்னிடமிருந்து விமர்சனங்களை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.
நான் எதுவுமே குறிப்பிடாவிட்டால் அப்படம் மோசமாக இருக்கிறது என்று முடிவு செய்துவிடுகிறார்கள். எனக்கு சில படங்கள் பிடித்திருக்கும், ஆனால், அதனை விமர்சனங்களாக பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. உண்மையில் எனது எண்ணங்களை பகிர்ந்து வந்தேன், அதுவே எனக்கு பின்னடைவாக இருந்தது. ஆனால், ‘கூலி’ படத்தை மிகவும் ரசித்தேன். அப்படத்துக்கு ’‘ஃபயர்’ இமோஜிக்களை வழங்குவேன். அப்படம் நிச்சயமாக அனைவரையும் மகிழ்விக்கும்” என்று தெரிவித்துள்ளார் அனிருத்.