சமுத்திரக்கனி, பரத் நடித்துள்ள ‘வீரவணக்கம்’ படத்தின் ட்ரெய்லரை விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டார்.
மலையாள இயக்குநர் அனில் நாகேந்திரன் இயக்கத்தில் சமுத்திரகனி, பரத் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘வீரவணக்கம்’. சுரபி லட்சுமி, ரித்தேஷ், பரணி, ரமேஷ் பிஷாரடி, சித்திக், அரிஸ்டோ சுரேஷ், ஆதர்ஷ், அய்ஸ்விகா, சித்தாங்கனா உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர்.
கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளர் பி. கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இத்திரைப்படத்துக்கு எம் கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி ரவீந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே குட்டப்பன் மற்றும் அஞ்சல் உதயகுமார் என ஐந்து இசையமைப்பாளர்கள் ஐந்து பாடல்களை வழங்கியிருக்கிறார்கள்.
மறைந்த பாடகர் டி. எம். சௌந்தரராஜனின் மகன் டி.எம்.எஸ். செல்வகுமார் இப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டார்.