திரைப்படம் வெளியான முதல் 3 நாட்களுக்கு திரையரங்குக்குள் பப்ளிக் ரிவ்யூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் என்று திரையரங்க உரிமையாளர்களுக்கு நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட் ஃப்ளவர்’. ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்னேஷ் நாயகனாக நடித்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நடிகர் விஷால், இயக்குநர்கள் பி.வாசு, சுராஜ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
இந்த விழாவில் விஷால் பேசும்போது, “பி.வாசு சார் அன்றிலிருந்து இப்போது வரை நிற்கிறார் என்றால் அவரின் படங்கள் மற்றும் அவரின் உழைப்புதான் காரணம். இப்போதெல்லாம் நிறைய பேருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள். ஆனால், சுராஜ் அவர்களுக்கு கண்டிப்பாக டாக்டர் பட்டம் தர வேண்டும். அவர் இயக்கிய படங்கள் பல பேருக்கு மெடிடேஷன். அவர் வடிவேலுவை வைத்து இயக்கிய நகைச்சுவை காட்சிகள் தான் இன்றும் பலருக்கும் மருந்தாக இருக்கிறது.
இந்த அரங்கம் நிறைந்து இருப்பது போல அரங்கம் நிறைந்த காட்சிகளாக இப்படம் ஓட வேண்டும். இங்கு சின்ன படம், பெரிய படம் என்று எதுவும் இல்லை. இந்த படத்தின் விழாவுக்கு வருவது என் கடமை. என் நண்பன் போராளி விக்னேஷுக்காக வந்திருக்கிறேன். அதற்கு காரணம் அவர் பல்வேறு கஷ்டங்கள், அவமானங்களை தாண்டி இங்கு வந்திருக்கிறார். அவர் வெற்றி பெற வேண்டும். மாணிக்கம் என்ற ஒரு பொக்கிஷம் உங்களுக்கு தயாரிப்பாளராக கிடைத்திருக்கிறார்.
2025-ல் என்ன நடக்கிறது என்பதை படமாக எடுக்கவே இன்று பல இயக்குநர்கள் திண்டாடுகிறார்கள். ஆனால், இயக்குனர் ஆண்ட்ரூ 2047-ல் என்ன நடக்கும் என்பதை திரைக்கதையாக்கி படமாக எடுத்துள்ளார். எனக்குப் பிடித்த இரண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் பகத் சிங், நேதாஜி. அதில் நேதாஜிக்கு இந்த படத்தில் Tribute செய்தது மகிழ்ச்சி.
திரையரங்க உரிமையாளர்களுக்கு ஒரு கோரிக்கை. ஒரு திரைப்படம் வெளியாகும்போது முதல் 3 நாட்களுக்கு மட்டும் திரையரங்க உரிமையாளர்கள் பப்ளிக் ரிவ்யூ எடுக்க அனுமதிக்க வேண்டாம். வெளியில் அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும். தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒரு முக்கியமான கோரிக்கை. தமிழ் சினிமாவில் ஒரே நாளில் 10 படங்கள் வெளியாகிறது. எந்த படத்துக்கும் சரியான அளவில் திரையரங்குகள் கிடைப்பதில்லை. அதனால் படங்கள் வெளியீட்டை ஒழுங்குப்படுத்த வேண்டும்.
விரைவில் நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க வேலைகள் நடந்து வருகின்றது. ஆகஸ்ட் 29 என் பிறந்த நாள். கண்டிப்பாக நல்ல செய்தி காத்திருக்கிறது. திருமண தேதியை விரைவில் அறிவிப்பேன்” என்றார்.