நடிகர் மோகன்லாலுக்கு மத்திய அரசு தாதா சாகேப் விருதை அறிவித்துள்ளது. இந்த விருது நாளை நடக்கும் 71-வது தேசிய திரைப்பட விருது விழாவில் வழங்கப்பட இருக்கிறது.
மோகன்லாலுக்கு விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மோகன்லால், இந்த விருதை மலையாள சினிமாவுக்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, “இது பெருமையான தருணம். இதை நான் தனியாக அனுபவிக்க முடியாது. பார்வையாளர்களுடனும், கடந்த காலத்தில் என்னுடன் பணியாற்றியவர்களுடனும், தற்போது பணியாற்றுபவர்களுடனும், பணியாற்றப் போகிறவர்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். நான் நிறைய கனவு காண்பவன் அல்ல.
எனது சமூக அர்ப்பணிப்பு என்ன என்று கேட்டால், எனக்கு வரும் கதாபாத்திரங்களைச் சிறப்பாக நடிக்க முயல்வதுதான். ஒரு திரைப்படத்தைத் தனியாக உருவாக்க முடியாது; அது பலரின் படைப்பு. நல்ல திரைப்படங்களை நாம் உருவாக்க வேண்டும் என்றும், மலையாளத் துறையில் நல்ல திரைப்படங்கள் உருவாக வேண்டும் என்றும் நான் அதில் ஒரு பகுதியாக இருக்கவும் விரும்புகிறேன்” என்றார்.