தவெக கூட்ட நெரிசல் துயரம் குறித்து நடிகர் விஷால் காட்டமாக பதிவிட்டுள்ளார். கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் கரூர் மாநகரை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கரூர் துயரச் சம்பவம் குறித்து விஷால் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “முழுக்க முட்டாள்தனம். நடிகர், அரசியல் கட்சித் தலைவர் விஜய்யின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைக் கேள்விப்படுவது மனதை வேதனைப்படுத்துகிறது, முற்றிலும் சரியல்ல.
பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் ஒவ்வொருவருக்கும் என் இதயம் அஞ்சலி செலுத்துகிறது. மேலும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். தவெக கட்சியினரிடம் எனது மனமார்ந்த வேண்டுகோள், இறந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் அதுதான் கட்சியால் செய்யக்கூடிய குறைந்தபட்ச உதவியாக இருக்கும். எதிர்காலத்தில் நடைபெறும் எந்தவொரு அரசியல் பேரணிகளிலும் இப்போதிலிருந்து போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் விஷால்.
Utter nonsense. Hearing that more than 30 people including children losing their lives over a stampede in actor/politician Vijay’s rally is heartwrenching and totally not right.
My heart goes out to every one of those innocent victims and my deepest condolences to every one of…
— Vishal (@VishalKOfficial) September 27, 2025