மதுரையில் பரோட்டா கடை வைத்திருக்கிறார், ஆகாச வீரன் (விஜய் சேதுபதி). அவருக்கு அரசியுடன் (நித்யா மேனன்) திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இருவரும் மனதளவில் திருமணக் கனவில் இருக்கிறார்கள். ஆனால், இரு குடும்பத்தினராலும் அதற்குச் சிக்கல் வருகிறது. அதையும் மீறி அரசியைத் திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வருகிறார், ஆகாச வீரன். நன்றாகச் சென்று கொண்டிருக்கும் குடும்ப வாழ்க்கையில் மாமியார்கள், மச்சான், நாத்தனாரால் பிரச்சினைகள் பூதாகரமாகின்றன. அது இருவருக்குள் பிரிவை ஏற்படுத்துகிறது. இறுதியில் கணவன் – மனைவி ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா என்பது கதை.
படித்த பெண்ணுக்கும் படிக்காத பரோட்டாமாஸ்டருக்குமான குடும்ப வாழ்க்கையை, சுற்றியிருக்கும் சுற்றங்கள் எப்படி கொத்து பரோட்டோ போடுகிறார்கள் என்பதை கமர்ஷியலாக கொடுத்திருக்கிறார், இயக்குநர் பாண்டிராஜ் . அரசியின் வீடு, ஆகாச வீரனின் ஓட்டல், குலதெய்வ கோயில் என மூன்று இடங்களைச் சுற்றி நகரும் திரைக்கதையை முடிந்தவரை சுவாரஸியமாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார் கள். கணவன் – மனைவி என்னதான் அன்யோன்யமாக இருந்தாலும் குடும்பச் சண்டையில் ஈகோ எப்படி எட்டிப் பார்க்கிறது என்பதை அழகாகவே சொல்லியிருக்கிறார்கள்.
அடித்துக்கொள்வது, பிறகு சேர்ந்துக்கொள்வது எனக் குடும்பங்களில் நிகழும் காட்சிகளைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திவிடுகிறது ஒவ்வொரு கதாபாத்திரமும். அதே நேரத்தில் கோயிலில் அதீதமாக நடக்கும் குடும்பச் சண்டைகள் ‘அட என்னய்யா இது’ என்று சலிப்பை உண்டாக்கினாலும், கணவன் – மனைவி பிரச்சினையை அவர்களே பார்த்துக்கொள்வார்கள், விவாகரத்தே ஆனாலும், மனங்கள் மீண்டும் இணைவதற்குத் தடையில்லை என்பதைப் படம் உணர்த்துவது அழகு.
கதையோட்டத்தோடு வரும் நகைச்சுவை கதாபாத்திரங்கள் சிரிக்க வைக்கின்றன. பிளாஷ்பேக்காக விரியும் கதைக்களம், ‘நான் லீனியர்’ பாணியில் செல்வதால், எதை நோக்கிச் செல்கிறது என்பதை அறிவதில் தொய்வு ஏற்படுகிறது. எதற்காக சண்டைப் போடுகிறார்கள் என்று படத்தில் வரும் கதாபாத்திரங்கள் புலம்புவது போல பார்வையாளர்களும் குழம்ப வேண்டியிருக்கிறது. சீரியஸானகாட்சிகளையும் காமெடியாகவும், காமெடியான காட்சிகளை சீரியஸாகவும் காட்டியிருப்பது ஒரு கட்டத்தில் போரடிக்க வைத்துவிடுகிறது. அதே நேரத்தில் நாயக பிம்பம் உள்ள விஜய் சேதுபதியை கதாபாத்திர நாயகனாக மட்டும் காட்டியிருப்பதற்கு இயக்குநரைப் பாராட்டலாம்.
காதலை, விதவிதமான பரோட்டாக்களில் காட்டுவதும் மோதலை, கொத்துப்பரோட்டாவை குத்திக் குதறிக் காண்பிப்பதும் கோபத்தை பரோட்டக்களில் சால்னா குழைத்துச் சாப்பிடுவதிலும் வெளிப்படுத்தும் ஆகாச வீரன் கேரக்டரில் அமர்க்களப்படுத்துகிறார், விஜய் சேதுபதி. மனைவியை மேடம் மேடம் என்று அழைத்து அன்பைப் பரிமாறும் இடமும் சண்டை எல்லை மீறும் இடங்களில் காலில் விழும் இடத்திலும் விஜய் சேதுபதி பெண்களுக்குப் பிடித்த வீரனாகிறார்.
நாயகியாக நித்யா மேனன், சரியான தேர்வு. விஜய் சேதுபதி என்னவெல்லாம் செய்திருக்கிறாரோ, அவற்றையெல்லாம் அவரும் செய்திருக்கிறார். கதையோட்டத்தில் தனித்து வரும் யோகிபாபு சிரிக்க வைக்கிறார். அம்மாவாகத் தீபா சங்கர் அப்ளாஸ் வாங்குகிறார். செம்பன் வினோத் ஜோஸ், சரவணன், காளி வெங்கட், மைனா நந்தினி, சென்றாயன், ஆர்.கே.சுரேஷ், வேட்டை முத்துக்குமார், சித்ரா லட்சுமணன் என நட்சத்திரப் பட்டாளம் படத்தில் உள்ளது.
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை கதையோட்டத்துக்கு நன்றாக உதவி இருக்கிறது. கிராமத்துக் காட்சிகளை அழகாகப் படம் பிடித்திருக்கிறது எம் சுகுமாரின் கேமரா. பிரதீப் இ.ராகவ்வின் படத்தொகுப்பு சிறப்பு என்றாலும் முதல் பாதியில் கொஞ்சம் குறைத்திருக்கலாம். தலைவன் தலைவி – குடும்பத்துக் கூட்டாஞ்சோறு.