விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘தலைவன் தலைவி’. பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் – அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். ஜூலை 25-ம் தேதி வெளியாகிறது.
படம் பற்றி இயக்குநர் பாண்டிராஜ் கூறியதாவது: இந்தப் படத்தின் தலைப்பு தோன்றிய தருணமும் இந்தப் படத்துக்கான கதை தோன்றிய சம்பவங்களும் அழகானது. ஓர் உண்மை சம்பவத்திலிருந்து இந்த கதையை எழுதி இருக்கிறேன். என் மகனுடைய பிறந்தநாள் விழாவுக்காகக் குலதெய்வ கோயிலுக்குச் சென்ற போது நான் சந்தித்த இரண்டு கதாபாத்திரங்கள் ஆகாச வீரன் – பேரரசி. நேரில் பார்த்ததைப் படமாக எடுக்க முடியாது. ஆனால் இப்படி இருந்தால், எப்படி இருக்கும்? என்ற ஒரு கேள்விதான் இந்த கதாபாத்திரம். அதன் பிறகு இதை எழுதத் தொடங்கினேன்.
எழுத எழுத அது வேறொன்றாக மாற்றம் பெற்றது. அதை எழுதும் போது தான் ஆகாச வீரன் எனும் கதாபாத்திரத்தின் மதிப்பு உயர்ந்தது. ஏனென்றால் ஆகாச வீரன் சிரிக்க வைப்பான், அழ வைப்பான், டார்ச்சர் செய்வான். இவன் எந்த மாதிரியான கதாபாத்திரம் என்று வரையறுக்க முடியாது. பொதுவாக ஹீரோ கதாபாத்திரம் என்றால் அதற்கென்று வரையறை இருக்கும். இதில் எந்த வரையறையும் இல்லாத ஒரு கதாபாத்திரம், தான் ஆகாச வீரன். இந்த கதாபாத்திரத்தை எல்லா கதாநாயகர்களாலும் செய்ய முடியாது. இந்த கதாபாத்திரத்தை விஜய் சேதுபதியால் மட்டுமே செய்ய இயலும். படம் பார்க்கும்போது அதை உணர்வீர்கள்.
பேரரசியின் கதாபாத்திரமும் ஆகாச வீரனை போன்றது தான். அந்த கதாபாத்திரத்துக்கு எந்த வரையறையும் இருக்காது. அந்தக் கதாபாத்திரம், அழகானவள், அன்பானவள், அன்பான அம்மா -அழகான மருமகள்- நல்ல மனைவி – என்று இருந்தாலும் எப்போது எப்படி மாறுவார் என்று தெரியாது. இதுபோன்ற கதாபாத்திரத்தைக் கையாள்வது கடினம். ஆனால் பேரரசி, ஆகாச வீரனை அதிகமாகக் காதலிப்பார். இதுபோன்ற கதாபாத்திரத்தை நித்யா மேனனை தவிர வேறு யாராலும் ஏற்று நடித்திருக்க முடியாது. இவ்வாறு பாண்டிராஜ் கூறினார்.