தர்ஷன் நடித்துள்ள ‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது படக்குழு.
‘கனா’ மற்றும் ‘தும்பா’ படங்களுக்குப் பிறகு மீண்டும் நாயகனாக நடித்துள்ளார் தர்ஷன். அடுத்து ‘ஹவுஸ் மேட்ஸ்’ என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ஃபேன்டஸி ஹாரர் காமெடி பாணியில் இப்படத்தினை உருவாக்கியுள்ளார்கள். இப்படத்தின் உரிமையை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. தற்போது ஆகஸ்ட் 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.
இதில் காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ, வினோதினி , தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் உள்ளிட்ட பலர் தர்ஷனுடன் நடித்துள்ளார்கள். இதனை புதுமுக இயக்குநர் ராஜவேல் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர். ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தினை விஜய பிரகாஷ் மற்றும் சக்திவேல் இணைந்து தயாரித்துள்ளார்கள். இதன் ஒளிப்பதிவாளராக சதீஷ், இசையமைப்பாளராக ராஜேஷ் முருகேசன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
ஓர் அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிலும் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாகவும், மிடில் கிளாஸ் குடும்பங்களின் அன்றாட உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையிலும் படக்குழு உருவாக்கி இருக்கிறது.