நடிகர் ரவி மோகன், ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ என்ற பெயரில் சொந்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதன் தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது.
நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, ஜெனிலியா, ரிதேஷ் தேஷ்முக், மணிகண்டன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், கன்னட நடிகர் சிவராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். இதில் ரவி மோகனுடன் அவர் தோழி கெனிஷாவும் கலந்து கொண்டார்.
முன்னதாக ரவி மோகன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறும்போது, “சினிமாவில் நான் செய்ய வேண்டும் என்று நினைப்பது அதிகம் இருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று ரவி மோகன் ஸ்டூடியோஸ். என்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம். அதன் முதல்படியாக கார்த்திக் யோகி இயக்கத்தில் நான் நடிக்கும் ‘ப்ரோ கோடு’ படம் உருவாகிறது.
அடுத்து யோகிபாபு நடிப்பில் படம் இயக்கப் போறேன். ரவி மோகன் ஸ்டூடியோஸ் ஆரம்பிக்க வேண்டும் என்பது என் கனவு. அதைபோல பலருடைய கனவுகளுக்கு உயிர் கொடுப்பதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஏற்கெனவே புதுமுக இயக்குநர்கள், இளம் திறமையாளர்கள், நடிகர்கள், படைப்பாளிகள் என்று வாய்ப்பு வழங்குவதற்கான முன் தயாரிப்பு பணிகள் போய் கொண்டிருக்கின்றன.
அதுமட்டுமில்லாமல் ஓடிடி தளங்களிலும் சில விஷயங்களைத் தொடங்க இருக்கிறோம். நல்ல கதைகளோடு உருவாகி, ரிலீஸுக்கு காத்திருக்கிற திரைப்படங்களுக்கு ரவி மோகன் ஸ்டூடியோஸ் எப்போதும் ஆதரவாக இருக்கும். இதற்கு உங்கள் ஆதரவு தேவை” என்று தெரிவித்துள்ளார்.