தனது தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாக வெற்றிமாறன் அறிவித்துள்ளார்.
வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள ’பேட் கேர்ள்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். இதில் படத்தினைப் பற்றி பேசிவிட்டு, பின்பு தனது தயாரிப்பில் வெளியாகும் கடைசி படம் இது தான் என்று தெரிவித்துள்ளார் வெற்றிமாறன்.
இந்தச் சந்திப்பில் வெற்றிமாறன் பேசும் போது, “தயாரிப்பாளராக இருப்பது அழுத்தத்தைக் கொடுக்கிறது. இயக்குநராக இருப்பது ஜாலியாக இருக்கிறது. இயக்குநர் வேலையை சரியாக செய்தால் போதும். அதுவே தயாரிப்பாளராக இருந்தால் படம் சம்பந்தப்பட்ட அனைவருமே என்ன பேசுகிறார்கள், நாம் என்ன பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டியது இருக்கிறது. ஏனென்றால் அனைத்துமே படத்தின் வணிகத்தை பாதிக்கிறது. அது ப்ரஷராக மாறுகிறது.
தயாரிப்பாளராக இருப்பது நிறைய விஷயங்கள் சம்பந்தப்பட்டது. ஏற்கனவே ‘மனுஷி’ என்ற படம் நீதிமன்றத்தில் இருக்கிறது. அங்கிருந்து தீர்ப்பு வந்திருக்கிறது, அடுத்து என்ன என்பதை முடிவு செய்ய வேண்டும். ‘பேட் கேர்ள்’ படமும் மறுதணிக்கை வரை சென்று தணிக்கை வாங்கியிருக்கிறோம். படத்தின் டீஸரைப் பார்த்துவிட்டு பலரும் அவர்களுடைய எண்ணங்களைத் தெரிவித்தார்கள். ஆனால், படம் அப்படியாக இல்லை.
ஒரு படத்தை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதை முடிவு செய்யும் அமைப்பு தணிக்கை குழு. அந்தக் குழு ‘பேட் கேர்ள்’ பார்த்துவிட்டு U/A 16+ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். ’மனுஷி’ படம் பல்வேறு தணிக்கைக்கு சென்று நீதிமன்றம் வரை சென்று வந்திருக்கிறது. என்னை மாதிரி ஆட்களுக்கு தயாரிப்பாளராக இருப்பது பெரும் சவாலாக இருக்கிறது. ஆகையால் என்ன முடிவு செய்திருக்கிறேன் என்றால் ‘பேட் கேர்ள்’ படம் தான் எனது தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வரும் கடைசிப் படமாக இருக்கும். அதற்குப் பின் அந்தக் கடையை சாத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார் வெற்றிமாறன்.