உமாபதி ராமையா இயக்கவுள்ள புதிய படத்தில் நட்டி நாயகனாக நடிக்கவுள்ளார். இதன் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
’ராஜா கிளி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா. தற்போது அவருடைய இயக்கத்தில் உருவாகும் 2-வது படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதனை கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் காந்தாரா ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. முழுக்க அரசியல் கலந்த நகைச்சுவை, பொழுதுபோக்காக இப்படம் உருவாகிறது.
இதில் நட்டி நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அவருடன் ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், விஜி சந்திரசேகர், வடிவுக்கரசி, இளவரசு, எம்.எஸ். பாஸ்கர், கிங்ஸ்லி, ஜான் விஜய், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக பி.ஜி.முத்தையா, இசையமைப்பாளராக தர்புகா சிவா ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
இப்படம் குறித்து இயக்குநர் உமாபதி ராமையா, “திரைத்துறையின் மேல் அளவில்லாத ஆர்வமுள்ள கண்ணன் ரவி சார் உடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு ஒரு பெரும் பாக்கியம். நிஜத்தை அடிப்படையாகக் கொண்டு நகைச்சுவையுடன் உருவாகும் பொழுதுபோக்கு படமாக இது அமையும். நட்டி சார் ஹீரோவாக இணைந்திருப்பது மகிழ்ச்சி. சில நிமிடங்கள் கதையைச் சொன்னவுடனேயே அவர் சம்மதித்தது எனக்கு பெரும் திருப்தியையும், இந்தக் கதையை அப்படியே திரையில் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பையும் அளித்தது. இன்று படப்பிடிப்பைத் துவக்கி விட்டோம், விரைவில் ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.