நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் நாயகனாக நடித்துள்ள படம் ‘உருட்டு உருட்டு’. நாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ளார். மற்றும் ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா சின்னாலம்பட்டி சுகி, பாவா லட்சுமணன், சேரன் ராஜ், மிப்பு நடித்துள்ளனர்.
ஜெய் ஸ்டூடியோ கிரியேஷன்ஸ் சார்பில் சாய் காவியா, சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரித்துள்ளார். எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கிறார் பாஸ்கர் சதாசிவம். இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசும்போது, “தமிழ் திரையுலகின் தாரக மந்திரம், என்றைக்கும் அழிக்க முடியாத நிரந்தரமான பெயர் நாகேஷ். அவர் என் மகன் செல்வராகவன் இயக்கிய ‘காதல் கொண்டேன்’ படத்தில் நடித்திருக்கிறார். நாகேஷை பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் கே.பாலசந்தர் பற்றியும் சொல்ல வேண்டும். இருவரும் செய்த சாதனைகள் அவ்வளவு இருக்கிறது. அவர் பேரன் கஜேஷை ஆசிர்வதிக்க வேண்டும் என்றுதான் நான் வந்தேன்.
ஆனந்த பாபுவின் சூழ்நிலையை நான் கண் முன் பார்த்திருக்கிறேன். தனுஷை அறிமுகப்படுத்த நானே தயாரிப்பாளராக இருந்தேன். நானே இயக்குநராகவும் இருந்தேன். ஆனால், ஆனந்த் பாபு, தன் மகனுக்காக ஒவ்வொரு அலுவலகத்துக்கும் போனார். என் அலுவலகத்துக்கும் வந்திருந்தார். என் மகன்களின் அலுவலகத்துக்கும் சென்றார். அந்த தந்தையின் வலிக்கு இந்தப் படம் பெரிய வெற்றி பெற வேண்டும்.” என்றார்.
இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.வி.உதயகுமார், ஆனந்த்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.