’தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் ‘தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்று கூறியிருந்தார். அவரது இந்த கருத்து கன்னட அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசும்போது, “ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என்னுடைய பேச்சை தொடங்கும்போது ‘உயிரே உறவே தமிழே’ என்று தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்” என்று கூறியிருந்தார். இதற்கு சிவராஜ்குமாரும் தலையை ஆம் என்று அசைத்து ஆமோதித்தார்.
ஆனால் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீன் ஷெட்டி கூறும்போது, “தமிழ் பிறந்த பிறகுதான் கன்னடம் பிறந்தது என்றும் கன்னடத்தை விட தமிழ்தான் சிறந்தது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். நாங்கள் கமலை எச்சரிக்கிறோம். உங்களுக்கு கர்நாடகாவில் வியாபாரம் வேண்டும். ஆனாலும் கன்னடத்தை அவமதிக்கிறீர்களா?
இன்று நீங்கள் எங்கள் மாநிலத்தில் இருந்தீர்கள். உங்கள் மீது கருப்பு மை பூச நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால் நீங்கள் ஓடிவிட்டீர்கள். கர்நாடகாவிற்கும் அதன் மக்களுக்கும் எதிராகப் பேசினால், உங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்று நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம். உங்கள் படம் கர்நாடகாவில் தடை செய்யப்படும் என்றும் நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களிலும் கன்னட அமைப்புகளை சேர்ந்த பலர் கமல்ஹாசனின் கருத்துக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.