‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தின் மூலம் வித்தியாசமான கதைக்களத்தை எடுத்துக் கொண்டு கவனம் ஈர்த்த அதியன் ஆதிரையின் இரண்டாவது படம். சமூக அக்கறையுள்ள படங்களை லாப நோக்கம் உள்ளிட்ட சமரசங்களுக்கு உட்படுத்தாமல் தொடர்ந்து தயாரித்து வரும் பா.ரஞ்சித்தின் அடுத்தப் படம் போன்ற லேபிள்களுடன் வெளியாகியுள்ள ’தண்டகாரண்யம்’ எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
மலைக் கிராமம் ஒன்றில் தமிழக வனத் துறையில் பணிபுரியும் முருகன் (கலையரசன்). இவரது மூத்த சகோதரர் சடையன் (அட்டகத்தி தினேஷ்) பழங்குடி மக்களுக்காக போராடி வருபவர். சில காரணங்களால் வனத் துறையிலிருந்து வெளியேற்றப்படும் முருகன், ஜார்க்கண்ட் மாநிலத்தில் துணை ராணுவப் படையில் சேர்கிறார். இங்கு பயிற்சி பெறுபவர்கள் நாடு முழுவதும் நக்சல் ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இதன் பிறகு அந்தப் பயிற்சி முகாமில் நடக்கும் சம்பவங்களும், அதை பற்றிய உண்மையும் முருகனையும் அவரை சார்ந்தோரையும் எந்த விதத்தில் பாதிக்கிறது? பிறகு என்ன நடக்கிறது என்பதே ‘தண்டகாரண்யம்’ படத்தின் திரைக்கதை.
கதை 2008 காலகட்டத்தில் நடப்பதாக காட்டப்படுகிறது. ராமாயணத்தில் அடர்ந்த வனப்பகுதிகள் தண்டகாரண்யம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த தலைப்புக்கு ஏற்றவகையில் படம் பெரும்பாலும் வனப்பகுதிகளிலேயே படமாக்கப்பட்டுள்ளது. ராமாயணத்தைப் போலவே இந்தக் கதையிலும் அண்ணன் – தம்பி கதாபாத்திரங்கள் பிரதானமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிகார ஒடுக்குமுறையையும், நக்சல் வேட்டை என்ற பெயரில் பழங்குடி மக்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளையும் சமரசமில்லாமல் காட்டிய இயக்குநர் அதியன் ஆதிரை, மனதை பதைபதைக்க வைக்கும் காட்சியமைப்புகளுடன் கூடிய உணர்வுபூர்வ சினிமாவை தந்து வெற்றி பெற்றுள்ளார்.
முழுக்க சீரியஸ் தன்மை கொண்ட கதைக்களத்தில் லேசாக பிசகினாலும் சலிப்பை தந்துவிடக்கூடிய சூழலில், தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையிலேயே அமர வைக்கும் திரைக்கதை உத்தியை ஓரளவு சிறப்பாக கையாண்டிருக்கிறார்.
ஜார்க்கண்ட் முகாமில் நடக்கும் பயிற்சி, கலையரசனுக்கும் டான்சிங் ரோஸ் ஷபீர் கல்லரக்கல்லுக்கும் இடையிலான மோதல் காட்சிகள் போன்றவை அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்புடனே நகர்வது சிறப்பான மேக்கிங். குறிப்பாக, சமையலறையில் நடக்கும் சண்டைக் காட்சி தத்ரூபம். பயிற்சி முகாம் கொடூரங்கள் ‘டாணாக்காரன்’ படத்தை நினைவூட்டினாலும், அதற்கு சற்றும் குறையாத வகையில் இப்படத்தில் வரும் காட்சிகளும் முகத்தில் அறைகின்றன. சித்ரவதை காட்சிகள் எந்த இடத்திலும் ஆடியன்ஸிடம் வலிந்து திணிக்காமல் வலியை கடத்துகின்றன.
படத்தின் மற்றொரு ப்ளஸ் என்றால், அது நடிகர்களின் தேர்ந்த நடிப்புதான். சில தினங்களுக்கு முன்னால் ஒரு மேடையில் நடிகர் கலையரசன் தனக்கு இடைவேளையிலேயே இறந்து விடும் கதாபாத்திரத்தைத்தான் கொடுக்கிறார்கள் என்று புலம்பியிருந்தார். அவர் யாரை மனதை வைத்து அப்படி பேசினாரோ அவர்களுக்கான பதிலாக இந்தப் படத்தை எடுத்துக் கொள்ளலாம். அந்த அளவுக்கு அப்பாவித்தனமும் துணிச்சலும் கொண்ட இளைஞனாக சிறப்பான நடிப்பை தந்து அசத்தியிருக்கிறார்.
படம் முழுக்க சீரியஸ் தன்மையுடன் வரும் அட்டகத்தி தினேஷ் பேசும் வசனங்கள் அப்ளாஸ் அள்ளுகின்றன. மற்றொரு குறிப்பிடத்தக்க நடிப்பு, டான்சிங் ரோஸ் ஷபீர் கல்லரக்கல் உடையது. ‘சார்பட்டா பரம்பரை’க்குப் பிறகு பேசப்படும் கதாபாத்திரமாக ‘அமிதாப்’ இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம். நெகட்டிவ், பாசிட்டிவ் என இருமுகம் காட்டி ஸ்கோர் செய்கிறார். பாலசரவணன், யுவன் மயில்சாமி, நாயகி வின்சு ரேச்சல் சாம், ரித்விகா உள்ளிட்டோர் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.
பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு காதல் காட்சிகளில் வனத்தை ரசிக்கவும், சீரியஸ் காட்சிகளில் அதே வனத்தை கண்டு அச்சம் கொள்ளவும் வைக்கிறது. ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை சிறப்பு. குறிப்பாக படம் முழுக்க வரும் ஓர் ஒப்பாரி, மனதை அறுக்கிறது. பாடல்கள் ஓகே ரகம். இளையராஜாவின் இரண்டு பாடல்கள் பயன்படுத்தப்பட்ட விதம் கச்சிதம்.
படத்தின் குறைகள் என்று பார்த்தால், இப்படி ஒரு படத்தில் தினேஷுக்கான அதீத ஹீரோயிச காட்சிகள் எதற்கு என்ற கேள்வி எழாமல் இல்லை. பெண் கதாபாத்திரங்களுக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். இரண்டாம் பாதி திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். இவற்றை தவிர்த்துவிட்டு பார்த்தால் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளை, உண்மைச் சம்பவங்களின் தொகுப்பை கற்பனை கலந்தும் முடிந்தவரை நேர்த்தியாகவும் சொல்லியிருக்கும் ‘தண்டகாரண்யம்’ நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய படைப்பு என்பதில் சந்தேகம் இல்லை.