மும்பை: ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இந்தி ரீமேக் ஆன ‘தடக் 2’ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகும் பெரும் வரவேற்பை பெற்ற ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இந்தி ரீமேக் ஆக உருவாகியுள்ளது ‘தடக் 2’.
மராத்தியில் வெளியாகி பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய ‘சாய்ராட்’ படத்தின் ரீமேக் ஆக ‘தடக்’ முதல் பாகம் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. முதல் பாகத்தை தயாரித்த கரண் ஜோஹரே இதனையும் தயாரித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 1 அன்று வெளியாக உள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – ‘பரியேறும் பெருமாள்’ பேசிய சாதிய ஒடுக்குமுறை என்ற ஒற்றை வரியை மட்டும் எடுத்துக் கொண்டு இந்தி படங்களுக்கே உரிய கலர்ஃபுல் காதல் காட்சிகள், குரூப் டான்சர்கள் சூழ் நடனம் என எடுத்துள்ளனர் என்பதை ட்ரெய்லரிலேயே ஹெவியாக உணர முடிகிறது.
பரியேறும் பெருமாள் படத்தில் நாயகனுக்கும் நாயகிக்குமான காதல் வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்காது. நட்பை தாண்டிய ஒரு அழகிய உறவாக காட்டப்பட்டிருக்கும். ஆனால் இதில் இருவருக்கும் இடையில் இருப்பது காதல் தான் என்பதை ட்ரெய்லரிலேயே ஆணித்தரமாக நிறுவிவிட்டனர். அதை உறுதி செய்ய ஒரு முத்தக் காட்சியை வேறு சேர்த்துள்ளனர்.
இந்தியில் நல்ல படங்கள் வருவதே அத்திப் பூப்பது போல ஆகிவிட்ட நிலையில். ஒரு நல்ல படத்தை எப்படி ரீமேக் செய்துள்ளனர் என்பதை ஆக்ஸ்ட் 1-ல் பார்க்கலாம். ‘தடக் 2’ ட்ரெய்லர் வீடியோ: