ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் டிக்கெட் முன்பதிவில் சாதனை படைத்து வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படத்தில் ரஜினி, சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், ஆமிர்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படம் வரும் ஆகஸ்ட் 14 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்துக்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் நேற்று (ஆக.08) தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய ஒரு சில மணி நேரங்களிலேயே சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அனைத்து திரையரங்குகளும் புக் செய்யப்பட்டன. கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ‘கூலி’ படம் அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டது. கவுன்ட்டர் டிக்கெட் பெறுவதற்கு திரையரங்குகளில் வாயிலில் கூட்டம் முண்டியடித்தது.
ஒரு மணி நேரத்தில் கேரளாவில் ரூ.1 கோடிக்கு மேல் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் புக்மைஷோ தளத்தில் 3 லட்சத்து 76 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. கேரளாவில் ஒரு மணி நேரத்தில் மட்டுமே 50 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. இந்திய அளவில் ‘எம்புரான்’ படத்துக்கு பிறகு அதிக அளவில் முன்பதிவு செய்யப்பட்ட இரண்டாவது படம் என்ற பெருமையை ‘கூலி’ பெற்றுள்ளது.