‘டான் 3’ படத்தின் வில்லன் கதாபாத்திரத்தை விஜய் தேவரகொண்டா நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபர்ஹான் அக்தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் தொடங்கப்படவுள்ள படம் ‘டான் 3’. முந்தைய பாகங்களில் ஷாரூக்கான் நாயகனாக நடித்திருந்தார். இதில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாக உருவாகி இருக்கிறது. அவருக்கு வில்லனாக நடிக்க விஜய் தேவரகொண்டாவை படக்குழு அணுகியிருக்கிறது. அவரோ வில்லனாக நடிக்க விரும்பவில்லை என்று நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘டான் 3’ படத்தில் முதலில் விக்ரம் மாஷி தான் வில்லனாக நடிக்கவிருந்தார். அவருக்கு பதிலாக வேறொருவரை ஒப்பந்தம் செய்ய பல்வேறு நடிகர்களிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும், இதில் நாயகியாக முதலில் கியாரா அத்வானி நடிப்பதாக இருந்தது. அவர் கர்ப்பமாக இருப்பதால், அவருக்கு பதிலாக கீர்த்தி சனோன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இதன் பெரும்பாலான காட்சிகளை ஐரோப்பா நாட்டில் படமாக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக ஃபர்ஹான் அக்தர் ஐரோப்பா நாட்டில் படப்பிடிப்பு இடங்களை தேர்வு செய்து முடித்துள்ளார்.